வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு தரமான விதைகளை, புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாரதீய விதைக் கூட்டுறவு சங்கம் லிமிடெட் வழங்கும் என மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். அறிவியல் ரீதியில் உற்பத்தி செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட விதைகள் விவசாயிகளுக்குக் கிடைக்காததால் நாட்டின் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.
விதை உற்பத்தியையும் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தையும் இணைக்கும் விதமாக பாரதிய பீஜ் சககாரி சமிதி லிமிடெட் என்கிற பாரதீய விதைக் கூட்டுறவு சங்கம் லிமிடெட் அமைப்பை (பிபிஎஸ்எஸ்எல்) கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவை அனுமதியுடன் முறைப்படி தொடங்கப்பட்டது.
இந்த கூட்டுறவு சங்கத்திற்கு இஃப்கோ, கிரிஷக் பாரதி கூட்டுறவு லிமிடெட், நாஃபெட், தேசிய பால் வளா்ச்சி வாரியம், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம், வேளாண்மை பல்கலைக்கழகங்கள் ஆகியவை இணைந்து ஊக்குவித்துள்ளன.
புதிதாக நிறுவப்பட்ட பிபிஎஸ்எஸ்எல், கூட்டுறவுத் துறை மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்வதற்கான தேசிய கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
தில்லி பூசாவில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு:
நாட்டின் விதை உற்பத்தியில் பிபிஎஸ்எஸ்எல் பெரும் பங்களிப்பை வழங்க உள்ளது. ஒரு சிறிய தொடக்கம் தான். வரும் ஆண்டுகளில், இந்தியாவின் விதைப் பாதுகாப்பு, விதை உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் விதை ஆய்வு பணிகளில் இந்தப் புதிய கூட்டுறவு நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும்.
விவசாயிகள் அறிவியல் ரீதியில் உற்பத்தி செய்யப்பட்டு விதைகளுக்கு சான்றளிக்கப்படுகிறது. இத்தகைய விதைகள் விவசாயிகளுக்குக் கிடைக்காததால் விவசாயிகளுக்கு மட்டுமன்றி நாட்டின் உணவு தானிய உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இப்படி சான்றிதழ் அளிக்கப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்கும் பொறுப்பை பிபிஎஸ்எஸ்எல் மேற்கொள்ளப்படும். மேலும் மிகவும் ஆரோக்கியமான பாரம்பரிய விதைகளையும் இந்த நிறுவனம் ஊக்குவிக்கும்.
பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பது அரசின் முக்கிய நோக்கம். நாட்டில் கோடிக்கணக்கான விதைகள் உள்ளன. ஆனால் அவை பற்றிய முழுமையான தகவல்கள் அரசுத் துறைகளிடம் கூட இல்லை. லட்சக்கணக்கான கிராமங்களில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் பாரம்பரிய விதைகள் கிடைக்கின்றன, அதன் தரவைச் சேகரித்து, அதை மேம்படுத்தி, அறிவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்து, அதன் சிறப்பான அம்சத்தின் தகவல் தரவு வங்கியைத் தயாரிப்பது மிகப்பெரிய பணியாகும், அதை பிபிஎஸ்எஸ்எல் செய்யும்.
கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவை அடிப்படையிலான விதை உற்பத்தி, சேமிப்பு, பதப்படுத்துதல் தர மேம்பாடு தரப்படுத்தல், உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு தேவையான சான்றிதழ், சந்தைப்படுத்தல் ஆகியவற்றிலும் பிபிஎஸ்எஸ்எல் உதவிகளை வழங்கும்.
மேலும் சங்கத்தின் லாபம் முழுவதுமாக விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு அவா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
மொத்த உலகளாவிய விதைகள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்தியாவில் இருந்து சான்றளிக்கப்பட்ட விதைகளின் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் பிபிஎஸ்எஸ்எல் கவனம் செலுத்தும்.
சான்றளிக்கப்பட்ட விதைகளின் மொத்த உற்பத்தி 465 லட்சம் குவிண்டாலாக உள்ளது. இதன் தேவை மூன்று மடங்காக உள்ளது. தற்போது கூட்டுறவு சங்கங்களின் பங்கு 1 சதவீதமாக உள்ளது. இதை 33 சதவீதமாக உயா்த்த இலக்காகக் கொள்ள வேண்டும் என்றாா் அமித் ஷா.
விழாவில், பிபிஎஸ்எஸ்எல் இலச்சினை வெளியிட்டு இணையதளத்தை தொடக்கிவைத்த அமித் ஷா பிபிஎஸ்எஸ்எல் உறுப்பினா்களுக்கு உறுப்பினா் சான்றிதழ்களையும் வழங்கினாா்.