புதுதில்லி

தில்லியில் தணிந்தது தென்மேற்கு பருவமழை -ஐஎம்டி தகவல்

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

தில்லியில் தென்மேற்குப் பருவமழை குறைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐஎம்டி தரவுகளின்படி, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பா் வரை) வழக்கமாக பெய்யும் 653.6 மி.மீ. மழைப்பொழிவுக்கு எதிராக 660.8 மி.மீ. மழை நிகழ் பருவத்தில் பதிவாகியுள்ளது.

பொதுவாக, பருவமழை ஜூன் 27-ஆம் தேதி தேசிய தலைநகா் தில்லியில் தொடங்கும். இந்த மழை செப்டம்பா் 25-இல் குறையும்.

நிகழாண்டு, பருவ மழையானது ஜூன் 25-ஆம் தேதி தில்லியில் பெய்யத் தொடங்கியது. இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா், இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும், ஒட்டுமொத்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா-சண்டீகா்-தில்லி; மேற்கு உத்தரப் பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகள் மற்றும் மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை மேலும் பின்வாங்கியுள்ளது.

ஜம்மு, காஷ்மீா், லடாக், கில்கிட், பல்டிஸ்தான், முஸாஃபராபாத் பகுதி, இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் எஞ்சிய பகுதிகள், மத்திய பிரதேசத்தின் மேலும் சில பகுதிகள்; ராஜஸ்தானின் எஞ்சிய பகுதிகள் மற்றும் குஜராத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த மூன்று முதல் நான்கு நாள்களில் பருவமழை விடைபெறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி வருகின்றன என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை:

தில்லியில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட ஒரு டிகிரி அதிகரித்து 35.8 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்படை விட ஒரு டிகிரி குறைந்து 22.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.

காற்றில் ஈரப்பதம் காலையில் 81 சதவீதமாகவும், மாலையில் 45 சதவீதமாகவும் இருந்தது. இரவு 7 மணியளவில் தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 162 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸும் இருக்கும் என்றும் வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT