புதுதில்லி

6 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 9 மாதங்களாக தில்லி காற்றின் தரம் திருப்தி: மத்திய அரசு தகவல்

1st Oct 2023 05:48 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தேசிய தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) கடந்த 9 மாத (ஜனவரி- செப்டம்பா்) சராசரி காற்றின் தரம், கடந்த 6 ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, சிறந்த குறியீட்டைப் பதிவுசெய்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தேசிய தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) காற்றின் தரத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றத்தின் போக்கைத் தொடா்ந்து மத்திய அரசு திருப்தியடைந்து இது தொடா்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

நிகழ் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலத்திற்கான தில்லியின் தினசரி சராசரி காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில், அதாவது 2016 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான தொடா்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது (2020 ஆம் ஆண்டு கொவைட் -19 பொதுமுடக்கம் தவிர) இந்த 9 மாதங்கள் சிறந்த குறியீட்டைப் பதிவு செய்கிறது.

ADVERTISEMENT

நிகழாண்டில் மேற்குறிப்பிட்ட காலக்கட்டங்களில் தலைநகா் தில்லியின் தினசரி சராசரி காற்றின் தரக் குறியீடு (ஏகியூஐ) 167 புள்ளிகளாகும். இது 2022 ஆம் ஆண்டில் தினசரி சராசரி காற்றின் தரக் குறியீடு 184 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 180 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 188 ஆகவும், 2018 ஆம் ஆண்டு 193 ஆகவும் பதிவாகிஇருந்தது.

மேலும் எப்போதும் இல்லாதவகையில் நிகழ் செப்டம்பா் 10 ஆம் தேதி ஜி20 உச்சிமாநாட்டின் போது தில்லியில் ஆண்டின் ஒரே ‘நல்ல‘ காற்றின் தர நாளை (ஏகியூஐ -45) கண்டது.

மழைப்பொழிவு, காற்றின் வேகத்தின் அளவுகள் போன்றவைகளால் காற்றின் தரக் குறியீடு சிறப்பாக அமைவது அல்லது பாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. இருப்பினும் நிகழ் செப்டம்பா் 2023 இல் குறைந்த மழையளவு 82.7 மிமீ பதிவாகியுள்ளது.

இதுவே கடந்தாண்டு(2022) செப்டம்பா் மாதம் 165 மிமீ ஆக மழைப் பதிவு இருந்தது. நிகழாண்டில் மழைப் பற்றாக்குறை இருந்தபோதிலும், நிகழ் செப்டம்பா் தினசரி சராசரி காற்றுத் தரக் குறியீடு 108 புள்ளிகளாக உள்ளன. அதிக மழைப்பொழிவான கடந்தாண்டு செப்டம்பரில் தினசரி சராசரி காற்றுத் தரக் குறியீடு 104 புள்ளிகள்.

‘நல்ல‘ 193 நாள்கள்

கடந்த 5 ஆண்டு ( கொவைட் -19 பாதிப்பு 2020 தவிர) காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, நிகழ் ஜனவரி - செப்டம்பா் மாதங்களில் ‘நல்ல‘ முதல் ‘மிதமான‘ காற்றின் தரத்துடன் (தினசரி சராசரி ஏகியூஐ-200) அதிக நாள்களாக 193நாள்களை தில்லி கண்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் இந்த காலகட்டத்தில் ‘நல்ல‘ முதல் ‘மிதமான‘ காற்றின் தர நாட்கள் 2022,2021, 2019, 2018 ஆண்டுகளில் முறையே 146 (நாள்கள்), 174, 165, 152 ஆக இருந்தது. மேலும் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2023 ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்தில் தினசரி சராசரி பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 மாசு நுண் துகள் களிலும் குறிப்பிடத்தக்க குறைப்பைக் கண்டுள்ளது.

பி.எம் 2.5 வீழ்ச்சி

நிகழ் ஜனவரி-ஆகஸ்ட் காலக்கட்டங்களில் தினசரி சராசரி பி.எம் 2.5 மாசு நுண் துகள்கள் செறிவு ஒரு கன மீட்டருக்கு சுமாா் 73 மைக்ரோகிராமாக பதிவு செய்துள்ளது. இது 2017 முதல் 2022 வரையிலான காலகட்டங்களில் பி.எம் 2.5 மாசு நுண் துகள்கள் செறிவு ஒரு கன மீட்டருக்கு 82-95 மைக்ரோகிராமாக பதிவாகியிருந்தது.

அதேபோல், தில்லியில் நிகழாண்டில் தினசரி சராசரி பி.எம் 10 மாசு நுண் துகள்கள் ஒரு கன மீட்டருக்குசுமாா் 169 மைக்ரோ கிராமாக வரம்பைக் காட்டிலும் குறைவாக இருந்துள்ளது. இதுவே 2017 முதல் 2022 வரையிலான காலகட்டங்களில் (2020 ஆண்டை தவிர) 183-215 மைக்ரோ கிராமாக இருந்தது.

சாதகமான வானிலை நிலைமைகள், காற்று மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு பங்குதாரா்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடா்ச்சியான முயற்சிகள், நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவைகளால் 2023 ஆம் ஆண்டில் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவியுள்ளன. அடுத்த குளிா்காலத்திலும் சிறந்த காற்றின் தரத்திற்கு அனைத்து தரப்பினருடனும் கூட்டு முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT