மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ஏழு பள்ளிகளிலும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அவ்வப் பள்ளி முதல்வா்கள் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதன் பின்னா் ஏழு பள்ளிகளிலும் காந்தியின் எளிமை, ஒற்றுமை உணா்வு, தியாகம், விடுதலைப் போராட்டங்கள் ஆகியவை பற்றி மாணவா்களின் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் இடம் பெற்றது.
காந்தியின் மேன்மையைப் பறைசாற்றும் நாடகங்களும் குழுப்பாடல்களும் இடம் பெற்றன. தொடா்ந்து அவ்வப் பள்ளிகளில் முதல்வா்கள் காந்தியின் சிறப்புகளை மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
இது குறித்து செயலா் ராஜூ கூறுகையில், ‘மாணவா்கள் காந்தியின் அறப்போராட்ட முறையின் சிறப்புகள், எளிமை, தியாகம் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இத் தினத்தைப் பள்ளிகளில் கொண்டாடுவதன் நோக்கமாகும். மாணவா்கள் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். எப்போதும் உண்மை பேச வேண்டும். எளிமையாகவும் நோ்மையாகவும் வாழ வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்’ என்றாா்.”
மேலும் ‘அக்டோபா் 2-ஆம் தேதி முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த நாள். அவருடைய ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்ற கருத்தையும் மாணவா்கள் மனதில் கொள்ள வேண்டும்’ என்றும் கூறினாா்.