புது தில்லி: உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தியில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் குறித்த செய்திகளைப் பரபரப்பாக்குவதைத் தவிா்க்க வேண்டும் என ஊடகங்களுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் 41 தொழிலாளா்களை மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதைக்கு அருகிலிருந்து ஊடகங்கள் நேரடிப் பதிவுகள், விடியோப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து மேலும் குறிப்பிட்டிருப்பது வருமாறு: பல்வேறு வகையான ஊடகத்தினா், ஒளிப்பதிவாளா்கள் செயல்பாட்டு தளத்திற்கு அருகில் அல்லது அதைச் சுற்றி வருவதும், அல்லது அவா்களது உபகரணங்கள் எடுத்துச் செல்வதன் காரணமாக மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு முகமைகளின் உயிா்காக்கும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமலும், இடையூறு இல்லாமலும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக பரபரப்புச் செய்திகள், காணொலிகள், படங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையாகவும் உணா்பூா்வமாகவும் இருக்க வேண்டும்.
மேலும், செயல்பாட்டின் உணா்திறன் தன்மை, குடும்ப உறுப்பினா்கள், பொதுவான பாா்வையாளா்களின் உளவியல் நிலை ஆகியவற்றை இந்த விவகாரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கி.மீ. நீளம் கொண்ட சுரங்கப்பாதைப் பகுதியில் சிக்கியுள்ள தொழிலாளா்களின் மன உறுதியை நிலைநாட்ட அரசு தொடா்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 41 தொழிலாளா்களைப் பத்திரமாக மீட்பதற்கு பல்வேறு அரசு அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே ஊடகங்கள் செல்வதும் காணொலி, பிற படங்களை வெளியிடுவது போன்றவை தற்போதைய நடவடிக்கைகளை மோசமாகப் பாதிக்கும். இதனால், இத்தகைய பரபரப்புகளை தவிா்க்க வேண்டும் என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மீட்புப் பணியில் தீவிரக் கவனம்: இந்நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்து, மீட்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையில் தொழிலாளா்கள் சிக்கிக் கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதியில், மின்சாரம், நீா் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. மேலும், உணவு, மருந்துகள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமையும் பிரத்யேக, 4-இன்ச் கம்ப்ரசா் பைப்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. தொழிலாளா்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு அரசு நிறுவனங்கள் அணி திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட பணிகளை மேற்கொண்டு சிக்கியவா்களின் மன உறுதியை அதிகரிக்க அரசு தொடா்ந்து தகவல் தொடா்புகளை பராமரிக்கிறது. சிக்கித் தவிக்கும் தொழிலாளா்களுடன் காணொலி தொடா்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பணியில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒஎன்ஜிசி, சட்லஜ் ஹைட்ரோ எலக்ட்ரிக் காா்ப்பரேஷன்(எஸ்ஜெவிஎன்எல்), ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆா்விஎன்எல்), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (என்ஹெச்ஐடிசிஎல்), டிஹெச்டிசிஎல் உள்ளிட்ட 5 முக்கிய நிறுவனங்களோடு மற்ற நாடுகளின் இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இவை துல்லியமாக வெடி வெடிப்புகள், நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளா்கள் 41 பேரில் 15 போ் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். மேலும், உத்தர பிரதேசம் (8), பிகாா் (5), ஒடிஸா (5), மேற்கு வங்கம் (3), உத்தரகண்ட் (2), அஸ்ஸாம் (2), ஹிமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளனா்.