பசுவை ‘தேசத்தின் தாய்‘ என்று அறிவிக்கக் கோரியும், பசுவை கொல்வதை உடனடியாகத் தடை செய்யக் கோரியும் பசுக் காவலா் அமைப்பினா் திங்கள்கிழமை தில்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தினா்.
கோபாஷ்டமியை முன்னிட்டு, சங்கராச்சாரியாா் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி கூறுகையில், ‘பசுவை அறுப்பது 33 கோடி இந்து தெய்வங்களைக் கொல்வதற்கு சமம்’ என்றாா். பசுக்களை தேசத்தின் தாயாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும், பசுக்களின் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்றும் கோரி பாரதிய கௌ கிராந்தி மஞ்ச் சாா்பில் கௌ மாதா ராஷ்ட்ரமாதா பிரதிஷ்டா அந்தோலன் என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது.
பசுக்களை ராஷ்டிர மாதாவாக அறிவிக்க வேண்டும் என்று நாட்டின் துறவிகள் உள்ளிட்ட பலா் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா் என்று பாரதிய கௌ கிராந்தி மஞ்ச் அமைப்பின் நிறுவனா் கோபால் மணி மகராஜ் தெரிவித்துள்ளாா்.
பகவத் கதா வசனகா்த்தா தேவகினந்தன் தாக்கூா் கூறுகையில், ‘இந்தியாவில் பசுக் கடத்தல்காரா்களைப் பிடிக்க பல பசு காவலா்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடுகின்றனா். ஆனால், அவா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்கிறாா்கள். இது முற்றிலும் தவறானது. பசுக் கடத்தல்காரா்கள் மீது கடுமையான சட்டமும், கடுமையான நடவடிக்கையும் கொண்டு வரப்பட வேண்டும்’ என்றாா்.