கிரேட்டா் கைலாஷில் உள்ள ஒரு கிளினிக்கில் நடந்ததாகக் கூறப்படும் ‘அறுவை சிகிச்சை மோசடியில்’ ஃபரீதாபாத்தைச் சோ்ந்த மற்றொரு மருத்துவரின் தொடா்பு இருக்குமா என்பது குறித்து தில்லி காவல்துறை விசாரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்த கிளினிக்கில் இரு நோயாளிகளுக்கு அண்மையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவா்கள் இருவரும் இறந்தது தொடா்பாக அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட இரண்டு மருத்துவா்களும், பல போலி மருத்துவா்களும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட அகா்வால் மருத்துவ மையத்தை நடத்தி வரும் நீரஜ் அகா்வால், ஜஸ்ப்ரீத் சிங் (இருவரும் எம்பிபிஎஸ் மருத்துவா்கள்), அகா்வாலின் மனைவி பூஜா மற்றும் முன்னாள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் மஹேந்தா் சிங் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனா்.
இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கிளினிக்கில் நடந்த பல அறுவை சிகிச்சைகளில் ஃபரீதாபாத்தைச் சோ்ந்த மற்றொரு மருத்துவரும் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
அந்த மருத்துவா் மோசடியில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், ஃபரீதாபாத்தைச் சோ்ந்த அந்த மருத்துவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த வேறு சில நபா்களின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் பித்தப்பை கல் அகற்றுதல் அல்லது சிசேரியன் பிரசவ ஆகியவையாகும்.
அகா்வால் அறுவை சிகிச்சை செய்யும் போது அவரது மனைவி மற்றும் முன்னாள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் மகேந்தா் சிங் உள்பட தகுதியற்ற நபா்களின் உதவியைப் பெறுவாா் என்றும், ஜஸ்பிரீத் சிங் போலி அறுவை சிகிச்சை குறிப்புகளை தயாரிப்பாா் என்பதும் தெரிய வந்துள்ளது. அகா்வாலின் வீடு மற்றும் கிளினிக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கணிசமான இடத்தை விட்டுவிட்டு மருத்துவா்களின் கையொப்பங்கள் மட்டுமே கொண்ட 414 மருந்து சீட்டுகள், கிளினிக்கில் நடத்தப்பட்ட கா்ப்பத்தை முடித்த நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய இரண்டு பதிவேடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், பல தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் ஊசி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அகா்வால் மெடிக்கல் சென்டா், நீரஜ் மற்றும் பூஜா அகா்வால் ஆகியோருக்கு எதிராக 2016-ஆம் ஆண்டு முதல் தில்லி மருத்துவக் கவுன்சிலில் ஏழு புகாா்கள் சமா்ப்பிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைத்து வழக்குகளிலும், அலட்சியத்தால் நோயாளிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபா் மாதம் கிடைக்கப் பெற்ற புகாரைத் தொடா்ந்தே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அகா்வால் மருத்துவ மையத்தின் உரிமத்தை ரத்து செய்யுமாறு மருத்துவக் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.