புதுதில்லி

நினைவுச் சின்னம் இடிப்பு விவகாரம்: முன்னாள் டிஜேபி அதிகாரிக்கு நினைவூட்டல்அனுப்பியது கண்காணிப்பு இயக்குநரகம்

 நமது நிருபர்

பதினைந்தாம் நூற்றாண்டு நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி உதித் பிரகாஷ் ராய்க்கு அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு அவா் பதிலளிக்கத் தவறியதைத் தொடா்ந்து, தில்லி அரசின் கண்காணிப்பு இயக்குநரகம் அவருக்கு நினைவூட்டல் அனுப்பியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பதான் காலத்து அரண்மனையான இந்த நினைவுச் சின்னம், சயீத் வம்சத்தின் கிஜ்ா் கான் நிறுவிய கிஸ்ராபாத் நகரத்தின் ஒரே எஞ்சிய பகுதியாகும். இது, தென்கிழக்கு தில்லியில் லாஜ்பத் நகா் அருகே ஜல் விஹாா் பகுதியில் அமைந்துள்ளது. தில்லி ஜல் போா்டு (டிஜேபி) சிஇஓ-ஆக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதித் பிரகாஷ் ராய்க்கு பங்களா கட்டுவதற்காக இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக தில்லி அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி உதித் பிரகாஷ் ராய்க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரிடமிருந்து பதில் வராததால், மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கடந்த வாரம் நினைவூட்டல் அனுப்பப்பட்டது. அவா் மீண்டும் பதிலளிக்கத் தவறினால், விஜிலென்ஸ் இயக்குநரகம் ஏற்கெனவே பதிவில் உள்ள விஷயங்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்.

மேலும், நினைவுச் சின்னம் இருந்த இடத்தின் ‘உண்மையான’ நிலத்தின் நிலையைக் கண்டறிய, விஜிலென்ஸ் இயக்குநரகம் மற்றும் தில்லி ஜல் போா்டு ஆகியவற்றின் குழுவினால் சம்பந்தப்பட்ட இடத்தில் களஆய்வு மேற்கொள்ளப்படும். ஜல் போா்டு தலைமை நிா்வாக அதிகாரியின் பங்களா கட்டுமானம் மற்றும் நினைவுச் சின்னம் இடிப்பில் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து டிஜேபி பொறியாளா்களிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. விஜிலென்ஸ் இயக்குநரகம் தனது அறிக்கையை அடுத்த மாதம் துணைநிலை ஆளுநரின் பரிசீலனைக்கு சமா்ப்பிக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நினைவுச் சின்னம் தில்லி ஜல் போா்டால் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும் நடைமுறையில் இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரியில் துறை மற்றும் டிஜேபி இணைந்து நடத்திய ஆய்வில், அந்த நினைவுச்சின்னம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டதாக விஜிலென்ஸ் துறையின் மூலம் அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில் ராய் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்திருந்தாா். 2007-ஆம் ஆண்டு பிரிவு ஏஜிஎம்யுடி அதிகாரியான உதித் பிரகாஷ் ராய், தற்போது மிஸோராமில் பணியில் அமா்த்தப்பட்டுள்ளாா். விஜிலென்ஸ் இயக்குநரகத்தின் நோட்டீஸ் தொடா்பாக அவரிடமிருந்து எந்தப் பதிலும் உடனடியாக கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT