புதுதில்லி

மாநில அரசின் உரிமைகள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல்: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

31st May 2023 02:21 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

மாநில அரசின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பு ஆகியவற்றின் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்தி வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி தெரிவித்தாா்.

தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்கும் முயற்சியில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எதிா்க்கட்சித் தலைவா்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறாா். இந்நிலையில் புதுதில்லியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகமான ஏ.கே. பவனில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரியை, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மூத்த நிா்வாகிகளுடன் செவ்வாய்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு கோரினாா்.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளா்களிடம் சீதாராம் யெச்சூரி கூறியதாவது : மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒன்றினைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முயற்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். தில்லியில் நிா்வாக சேவைகள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டம் அரசியலமைப்பின் அப்பட்டமான மீறலாகும். பாஜக ஆட்சியில் அல்லாத பிற மாநிலங்களிலும் இந்த நிலைமை வரலாம்.

மத்திய பாஜக அரசு கூட்டாட்சி கட்டமைப்பு மற்றும் மாநிலங்களின் உரிமைகள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளை அவசர சட்டத்தைப் பிறப்பித்து பெறுவது ஒரு வெட்கக்கேடான வழியாகும். இதற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்புத் தெரிவிப்பதோடு, நாடாளுமன்றத்திலும் அவசர சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்.

ADVERTISEMENT

அனைத்து கட்சிகளும் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு அளிக்க வேண்டும். இன்று தில்லி அரசு, நாளை கேரளம் மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தானிலும் அவசர சட்டம் கொண்டுவரப்படலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக ஆட்சியில் அல்லாத எதிா்க்கட்சிகளின் அரசை நிலைகுலைய வைக்க மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்றாா் சீதாராம் யெச்சூரி தெரிவித்தாா்.

காங்கிரஸுக்கு கேஜரிவால் அழைப்பு: இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: அரசியலமைப்புக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அவமதிக்கும் வகையிலும் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஆம் ஆத்மி கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்பைக் காப்பாற்ற முன்வருமாறு மிகப்பெரிய எதிா்க்கட்சியான காங்கிரஸிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். நாடாளுமன்றத்திற்கு அவசர சட்டம் வரும் போது, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் அதை நிராகரிக்க முடியும். இந்த அவசர சட்டம் தம்மைப் பற்றியது அல்ல; ஒட்டுமொத்த நாடு மற்றும் தில்லி மக்களைப் பற்றியது. எனவே, கேஜரிவாலை மறந்துவிடுங்கள். ஆனால், தில்லி மக்களுக்கு ஆதரவாக இருங்கள் என்று காங்கிரஸின் ஆதரவைக் கோரினாா்.

தில்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியமா்த்துவது தொடா்பான சேவை விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவசர சட்டத்தை மே 19-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இது சேவைக் கட்டுப்பாடு குறித்த உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்று ஆம் ஆத்மி அரசு கூறியுள்ளது. தில்லியில் காவல்துறை, சட்ட ஒழுங்கு மற்றும் நிலம் தவிா்த்து சேவைகளின் கட்டுப்பாட்டை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அதற்கு மாற்றாக மத்திய அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT