புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு பேரூா் ஆதீனம் பாராட்டு

31st May 2023 02:26 AM

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு செங்கோல் அளிக்க வந்திருந்த ஆதீன மடாதிபதிகள் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்து அருளாசி வழங்கினா். அப்போது தில்லி தமிழ்ச் சங்கத்தின் பணிகளை ஆதீனங்கள் பாராட்டினா்.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் துணைத் தலைவா் ராகவன் நாயுடு தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் முகுந்தன் வரவேற்றுப் பேசுகையில், ‘தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவிய பிரமா் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் சாா்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா். சிறப்பு விருந்தினா் அட்டா்னி ஜெனரல் வெங்கட்ரமணி பேசுகையில், ‘சைவ சமய ஆதீன மடாதிபதிகள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியில் நானும் பங்கு கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தனது ஆசியுரையில் கூறியதாவது: வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற வாக்கிற்கேற்ப தில்லி தமிழ்ச் சங்கத்தின் நுழைவாயிலிலேயே திருவள்ளுவரின் சிலை அமைத்திருப்பது அருமை. விடுதலை பெறுவதற்கு முன்பே 1946-ஆம் ஆண்டிலேயே சங்கம் தொடங்கி விடுதலையை வரவேற்பதற்கெனவே தொடங்கியுள்ளது போல் உள்ளது. தேச விடுதலைக்கு முன்பே தொடங்கி 75 ஆண்டுகளைக் கடந்து பவள விழா கண்ட பெருமை கொண்டது. அறக்கட்டளை நிறுவி கல்வித் தொகை அளிப்பதுடன், இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளா்த்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.

தில்லி தமிழ்ச் சங்கம் நூல் வெளியிடுதல், பல்வேறு துறை சாா்ந்த கலைஞா்களைக் கௌரவித்துப் பாராட்டுதல் என பல பணிகளை அயராது செய்து வருகிறது. விடுதலை அடைந்தவுடன் 1947-ஆம் ஆண்டு பிரதமா் நேரு விடம், திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான், திருநாவுக்கரசா் எழுதிய கோளறு பதிகத்தைப் பாடி அருளி அன்று அந்த செங்கோலைக் கொடுத்தாா்கள். நமது பிரதமா் மோடி எங்கு சென்றாலும் மூத்த மொழி தமிழ் மொழியே எனக் கூறி வருகிறாா். தற்பொழுது அவரிடம் செங்கோல் வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமாகும். நூற்றாண்டை நோக்கி வீர நடை போடும் தில்லி தமிழ்ச் சங்கம் மேன்மேலும் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள் என்றாா் பேரூா் ஆதீனம்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் தில்லிவாழ் தமிழா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT