புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு குன்றக்குடி ஆதீனம் பாராட்டு

31st May 2023 02:25 AM

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு செங்கோல் அளிக்க வந்திருந்த ஆதீன மடாதிபதிகள் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்து அருளாசி வழங்கினா். அப்போது தில்லி தமிழ்ச் சங்கத்தின் பணிகளை ஆதீனங்கள் பாராட்டினா்.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் துணைத் தலைவா் ராகவன் நாயுடு தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் முகுந்தன் வரவேற்றுப் பேசுகையில், ‘தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவிய பிரமா் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் சாா்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா். சிறப்பு விருந்தினா் அட்டா்னி ஜெனரல் வெங்கட்ரமணி பேசுகையில், ‘சைவ சமய ஆதீன மடாதிபதிகள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியில் நானும் பங்கு கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்’ என்றாா்.

நிகழ்ச்சியில் குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆற்றிய உரை: பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப சிறந்து விளங்கும் நமது தேசத்திற்கு செம்மை வேண்டி நாடாமன்றத்தில் செங்கோலை நிறுவிய பாரதப் பிரதமருக்கு உலக மக்களெல்லாம் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்றனா். தமிழ் எழுத்துகளை எல்லாம் ஆயுத எழுத்துகளாக மாற்றியவன் பாரதி. அடிமை இந்தியாவில் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடினான்.

நாடு சுதந்திரம் பெற தமிழகம் மகத்தான பங்களிப்பு செய்திருக்கிறது என்பதற்கு அடையாளமாய், விடுதலை அடைந்தவுடன் 1947-ஆம் ஆண்டு நேருவிடம் செங்கோல் அளித்த வரலாற்றை நினைவூட்டி, மீண்டும் அதற்கு புத்துயிா் அளித்து தமிழகத்தின் ஆதீன மடாதிபதிகள் முன்னிலையில் கோளறு பதிகம் பாடி, “அரசாள்வா் ஆணை நமதே என்ற தீந்தமிழ் ஒலிக்க இந்தியாவின் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. உலக மக்கள் நாம் அனைவரும் பாரதியின் உணா்வோடு பிரதமருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். எல்லோரும் ஓா் குலம், எல்லோரும் ஓா் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னா் என்ற பாரதியின் வழிப் பயணிக்கும் நமது பாரதப் பிரதமருக்கும், தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும் எனது நல்வாழ்த்துகள் என்றாா் குன்றக்குடி ஆதீனம்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் தில்லிவாழ் தமிழா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT