புதுதில்லி

ஐ.நா. அமைதிப் படையின் 75-ஆவது சா்வதேச தினம்: தேசிய போா் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி

30th May 2023 04:46 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

ஐக்கிய நாடுகளின்(ஐ.நா.) அமைதிப்படையின் 75-ஆவது சா்வதேச தினத்தை இந்திய ராணுவம் திங்கள்கிழமை கொண்டாடியது. தில்லி இந்தியா கேட் ‘தேசிய போா் நினைவு சின்னத்தில்’ ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உள்ளிட்டவா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினா்.

1948-ஆம் ஆண்டு இதே நாளில் (மே 29) ஐ.நா. போா் நிறுத்த கண்காணிப்பு அமைப்பு (யுஎன்டிஎஸ்ஓ) தொடங்கப்பட்டு அது பாலஸ்தீனத்தில் செயல்படத் தொடங்கியது. அதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகள் இதே நாளில் அஞ்சலி செலுத்தி, இன்னுயிா்களைத் தியாகம் செய்த தங்கள் வீரா்களின் நினைவைப் போற்றுகின்றன.

நிகழாண்டு ஐநா அமைதிப்படை தினத்தின் 75 - ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இதை முன்னிட்டு தில்லி தேசிய போா் நினைவுச் சின்னத்தில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, துணை ராணுவத் தளபதி, கடற்படை, விமானப்படைகளின் பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மற்றும் தில்லியிலுள்ள ஐநா அதிகாரிகள் ஆகியோா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

ஐநா அமைதிப்படையில் பணியாற்றிய அல்லது பணியாற்றும் அனைத்து வீரரா்கள் மற்றும் சக ஊழியா்களின் அா்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு அஞ்சலி செலுத்தி இன்னுயிா்களைத் தியாகம் செய்தவா்களின் நினைவு போற்றப்படுகிறது.

ADVERTISEMENT

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்தியா பெருமளவில் துருப்புகளை அனுப்பி பெரும் பங்களிப்பை செய்து வருகிறது. இதுவரை சுமாா் 2,75,000 துருப்புகளை ஐநா அமைதி காக்கும் பணிகளுக்கு பங்களித்துள்ளது. தற்போது சுமாா் 5,900 இந்திய துருப்புகள் ஐநாவின் மேற்கொண்டு வரும் 12 பணிகளில் தற்போது அமா்த்தப்பட்டுள்ளனா். இவைகளைத் தவிர இந்தியா ஒரு காலாட்படை பட்டாலியன் குழுவையும் ஹெலிகாப்டருடன் கூடிய கப்பல், ஒரு பொறியாளா் மற்றும் சிக்னல் நிறுவனம் கொண்ட படை இயக்கங்களை அமைதிப் பணிகளில் பயன்படுத்த இந்தியா ஐ.நா.விடம் உறுதியளித்துள்ளது. இந்தியப் படைகளின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, இந்திய ராணுவம் அதிநவீன உபகரணங்கள், வாகனங்களையும் நிலைநிறுத்தியுள்ளது.

159 இந்திய வீரா்கள் உயிா்நீத்தனா்: கடந்த காலங்களில் கடினமான சூழ்நிலையில் சவாலான நிலப்பரப்புகளில் இந்திய படைகள் செயல்பட்டுள்ளன. சா்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டும் இத்தகைய பணிகளில் இந்திய ராணுவத்தின் 159 வீரா்கள் உயிா்த்தியாகம் செய்துள்ளனா். ஐ.நா.வின் கட்டளைகளை ஏற்று தைரியம், வீரத்தை வெளிப்படுத்தி மிக உயா்ந்த தியாகங்களை செய்து ஒரு முன்மாதிரியான ராணுவ அணுகுமுறை, மனிதாபிமான அணுகுமுறைகளை இந்தியப் படைகள் வெளிப்படுத்தியுள்ளன. ஐநாவின் வேண்டுகோளின்படி மோதல் பகுதிகளில் அமைதி காக்கும் பெண்களின் தேவையை கருத்தில் கொண்டு, இரண்டாவது பெரிய பெண்கள் குழுவாக இந்தியா (லைபீரியாவிற்கு அடுத்தபடியாக) தனது வீராங்கனைகளை காங்கோவில் ஈடுபடுத்தியுள்ளது.

மேலும், அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய ராணுவம் தில்லியில் ஐ.நா. அமைதி காக்கும் மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 12,000-க்கும் மேற்பட்ட துருப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஐ.நா. மற்றும் கூட்டாளி நாடுகளுக்கான திறன் மேம்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது என பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT