புதுதில்லி

தலைநகரில் பரவலாக லேசான மழை: ஜூன் 4 வரை வெப்பஅலைக்கு வாய்ப்பில்லை

30th May 2023 04:47 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை பிற்பகலில் பலத்த காற்றுடன் பரவலாக லேசான மழை பெய்தது. இதனால், வானிலை இனிமையானதாக மாறியது. இதற்கிடையே, இந்திய வானிலை துறையின் பிராந்திய முன்னறிவிப்பு மையம், ஜூன் 4 வரை வெப்பஅலை நிலைமைகள் தலைநகருக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

திங்கள்கிழமை பிற்பகலில் தலைநகரில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், பல பகுதிகளில் லேசான மழை பெய்ததாகவும் வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மேலும், வானிலை ஆய்வு மையம், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது என்றும் கூறினாா்.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி குறைந்து 21.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. , அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி குறைந்து 35 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 78 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 96 சதவீதமாகவும் இருந்தது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

வரலாற்று ரீதியாக மே மாதம் தில்லியின் வெப்பமான மாதமாக இருக்கும். சராசரி அதிகபட்ச வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது. இந்த முறை இயல்பை விட குறைவான வெப்பநிலை மற்றும் அதிக மழை பதிவாகியுள்ளது. இதற்கு வழக்கத்தை விட அதிகமான மேற்கத்திய இடையூறுகள்தான் காரணம் என்று வானிலை ஆய்வாளா்கள் கூறுகின்றனா். ஐஎம்டி தரவுகளின்படி, மே மாதத்தில் சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் இதுவரை 86.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக, தேசியத் தலைநகரில் மாதம் முழுவதும் 19.7 மிமீ மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த மாத தொடக்கத்தில் தில்லியில் அசாதாரணமான அடா்த்தியான பனிமூட்டம் காணப்பட்டது. மே 4 அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 15.8 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது 1901- இல் ஐஎம்டி பதிவுகளை வைத்திருக்கத் தொடங்கியதிலிருந்து இது மூன்றாவது குளிா்ச்சியான காலை ஆகும். ஏப்ரல் மாதத்தில் 20 மி.மீ.க்கும் அதிகமான மழையை நகரம் பதிவு செய்தது, இது 2017-ஆம் ஆண்டிலிருந்து அந்த மாதத்தில் மிக அதிகமான மழைப்பொழிவை பதிவு செய்துள்ளது.

தில்லியில் மே மாதத்தில் 40 டிகிரிக்கு மேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. வெப்ப அலை நிலைமைகள் சில பகுதிகளை சிறிது காலத்திற்கு பாதித்தது. சஃப்தா்ஜங் ஆய்வகம் இந்த பருவத்தில் இதுவரை எந்த வெப்ப அலை நாளையும் பதிவு செய்யவில்லை. ஒரு நிலையத்தின் அதிகபட்ச வெப்பநிலை சமவெளிகளில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அடையும் போது வெப்ப அலை என அறிவிக்கப்படுகிறது.

மிதமான பிரிவில் காற்றின் தரம்:இதற்கிடையே, தலைநகரில் தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திா் மாா்க், பஞ்சாபி பாக், பூசா, அசோக் விஹாா் உள்பட பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையப் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 90 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இந்த நிலையில், ஒரு புதிய மேற்கத்திய இடையூறுகள் செவ்வாய்கிழமை சில இடங்களில் பலத்த காற்று, மழை மற்றும் ஆலங்கட்டி மழையைக் கொண்டுவரும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், ஜூன் 4-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரிக்கு கீழே இருக்கும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT