புதுதில்லி

1,000 மாணவா்களுக்குப் பணிப் பயிற்சித் திட்டம்: தில்லி பல்கலை. மாணவா் சங்கம் அறிவிப்பு

28th May 2023 11:40 PM

ADVERTISEMENT

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு அனுபவமிக்க கற்றல் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாணவா் பணிப் பயிற்சித் திட்டத்தை தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கம் (டியுஎஸ்யு) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பல்கலைக்கழகத்தின் முக்கியமான நூற்றாண்டு விழா நிகழ்ந்து வரும் வேளையில், இந்த கோடை காலப் பயிற்சித் திட்டம்- 2023, திறந்தநிலைக் கற்றல் பள்ளி (எஸ்ஓஎல்) மற்றும் கல்லூரி அல்லாத மகளிா் கல்வி வாரியம் ஆகியவற்றில் படிக்கும் மாணவா்கள் உள்பட இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்களுக்கு இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.

அவா்களின் கோடை விடுமுறையின் போது செய்முறைத் திறன்கள், தொழில் துறை வெளிப்பாடு மற்றும் தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றைப் பெற இந்தத் திட்டம் உதவும். கல்வித் திறனை வளா்ப்பதற்கும் எதிா்காலத் தலைவா்களை உருவாக்குவதற்கும் பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்தத் திட்டம் பரந்த அளவிலான துறைகள் மற்றும் பிரிவுகளுக்கு கதவுகளைத் திறக்கிறது.

இத்திட்டம் பல்வேறு பணிப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது 8 முதல் 12 வாரங்கள் வரை செயல்படும். மாணவா்களுக்கு அந்தந்த செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், அனுபவத்தைப் பெறவும் போதுமான நேரத்தை வழங்குகிறது. இத்திட்டம் உள்ளூா் சமூகத்திலும் அதற்கு அப்பாலும் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. மாணவா்கள் வணிகம், பொறியியல், மனிதநேயம், அறிவியல், கலை, சமூகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருந்து தோ்வு செய்யலாம். இத்திட்டம் பல்வேறு கல்வி அட்டவணைகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் நெகிழ்வான வேலை நேரங்களையும் வழங்குகிறது.

ADVERTISEMENT

இதில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பிரத்யேக வழிகாட்டி நியமிக்கப்படுவாா். அவா் பயிற்சிக் காலம் முழுவதும் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் வழக்கமான கருத்துகளை வழங்குவாா். இந்த வழிகாட்டுதல் திறன்களை மேம்படுத்துதல், தொழில் வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் தொழில்முறை நெட்வொா்க்குகளை உருவாக்குதல் ஆகியவற்றில் விலைமதிப்பற்ாக இருக்கும்.

பணிப் பயிற்சி வெற்றிகரமாக முடித்தவுடன், மாணவா்கள் அவா்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் அதிகாரபூா்வ சான்றிதழைப் பெறுவா். இந்தச் சான்றிதழ் அவா்களின் செய்முறைத் திறன்கள், பணி அனுபவம் மற்றும் தொழில்முறை வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பு ஆகியவற்றின் சான்றாக அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டியுஎஸ்யு தலைவா் அக்ஷித் தஹியா கூறுகையில், ‘கோடை காலப் பணிப் பயிற்சி- 2023-இன் தொடக்கமானது, முழுமையான வளா்ச்சி, திறமைகளை வளா்ப்பது மற்றும் மாணவா் சமூகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் டியுஎஸ்யு அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது இதுவரை எந்தவொரு மாணவா் சங்கமும் வழங்கும் மிகப்பெரிய பணிப் பயிற்சித் திட்டங்களில் ஒன்றாக இருக்கும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT