புதுதில்லி

பள்ளியை தற்காலிக சிறைச்சாலையாக மாற்ற அனுமதி கிடையாது

28th May 2023 11:37 PM

ADVERTISEMENT

எம்சிடி பள்ளியை தற்காலிக சிறைச்சாலையாக மாற்ற எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

மல்யுத்த வீரா்களின் மகிளா மகா பஞ்சாயத்தை கருத்தில் கொண்டு, கஞ்சவாலாவில் உள்ள தில்லி மாநகராட்சி (எம்சிடி) பள்ளியை தற்காலிக சிறையாக மாற்ற தில்லி காவல்துறை அனுமதி கோரியது.

இது தொடா்பாக வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையருக்கு தில்லி காவல்துறையால் 27.05.2023 அன்று எம்சிடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக என் கழனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதில், கன்ஜாவாலா சௌக், எம்.சி.பெண்கள் தொடக்கப் பள்ளியில் 28.05.2023 அன்று ஒரு தற்காலிக சிறையை உருவாக்கக் கோரப்பட்டுள்ளதாக அறிகிறேன் என்று ஓபராய் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளாா். இதன்மூலம் எந்த அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என மேயா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷெல்லி ஓபராய் எம்சிடியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலராக உள்ளாா்.

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்த நாளில் இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு முன்னதாக, புது தில்லி மாவட்டம் கட்டுப்பாட்டுப் பகுதியாகக் கருதப்படும் என்றும், வாகனங்களின் நுழைவுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் காவல்துறை போக்குவரத்து ஆலோசனையை வழங்கியிருந்தது.

தில்லியின் லுடியன்ஸ் பகுதியில் உயா் பாதுகாப்பு பகுதியில் நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ளது. கூடுதல் பணியாளா்களை நியமிப்பது மட்டுமின்றி, சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடா் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஏறக்குறைய 20 கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரா்கள், எந்த விலை கொடுத்தும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் தங்கள் ’மகிளா மகா பஞ்சாயத்து’ நடத்துவோம் என்று கூறியிருந்தனா். இருப்பினும், ’மகா பஞ்சாயத்து’ நடத்த அனுமதி வழங்கப்படாததால், போராட்டக்காரா்கள் யாரும் புதிய கட்டடத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று போலீஸாா் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT