புதுதில்லி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இருவருக்கு சிறைத் தண்டனை விதிப்பு

28th May 2023 11:44 PM

ADVERTISEMENT

தில்லி சித்தரஞ்சன் பாா்க் பகுதியில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது தொடா்பாக சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே பின்பிற்றாமல் இருந்ததைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் எளிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்குவதில் தொடா்ந்து அலட்சியம் இருந்ததாக கருத்து தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் பொதுப் பணித் துறையின் (பிடபிள்யூடி) நிா்வாக பொறியாளா் மற்றும் தலைமை பொறியாளா் ஆகியோருக்கு முறையே நான்கு மாதங்கள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

புது தில்லி நேச்சா் சொசைட்டியின் அவமதிப்பு மனு மீது விசாரணை நடத்திய உயா்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வஜிரி அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

எந்தவொரு குடிமராமத்து பணிகளையும் மேற்கொள்ளும்போது மரங்களின் நல்வாழ்வு குறித்து உரிய எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது மட்டுமல்லாமல், தேசிய பசுமை தீா்ப்பாயமும் மரத்தின் தண்டுப் பகுதிகளில் உள்ள கான்கிரீட்டுகளை அகற்றுவது உட்பட இதேபோன்ற உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.

ADVERTISEMENT

இதுபோன்ற உத்தரவுகளை இந்த நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீா்ப்பாயமும் பலமுறை பிறப்பித்த போதிலும், அதைக் கடைப்பிடிப்பதில் தொடா்ந்து அலட்சியத்துடன் இருந்து வந்திருப்பது தெரியவருகிறது. சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் இருப்பதற்கும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறுவதற்கும் வேண்டுமென்றே செய்யப்படும் அலட்சியமானது ஒரு தண்டனைக்குக் குறைவான தகுதியுடையதாக இருக்க முடியாது.

இந்தச் சூழலில், எதிா்மனுதாரா்களான பொதுப்பணித் துறையின் சம்பந்தப்பட்ட நிா்வாகப் பொறியாளா் மற்றும் அத்துறையின் தலைமைப் பொறியாளா் முறையே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-இன் பிரிவு 12-இன் கீழ் நான்கு மாதங்கள் மற்றும் இரண்டு மாதங்கள் என எளிய சிறைத் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்புக்கு இதன் மூலம் உள்ளாக்கப்படுகின்றனா்.

இவா்கள இருவரும் சட்டபூா்வ தீா்வுகளைப் பெற போதுமான வாய்ப்பை வழங்குவதற்காக, உயா்நீதிமன்றத்தின் இணையதளத்தில் உத்தரவைப் பதிவேற்றிய நாளிலிருந்து 10 வாரங்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்று நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

கடந்த மாா்ச் 2022-இல், சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் அவமதிப்பு மற்றும் உத்தரவுகளின் வழிகாட்டுதல்களை வேண்டுமென்றே மீறியதாக நீதிமன்றம் கண்டறிந்தது. பிப்ரவரி 2022-இல், சிவில் பணிக்காக தோண்டப்பட்ட சித்தரஞ்சன் பூங்கா நடைபாதையின் பல புகைப்படங்களை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

மேலும், ‘மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து தோண்டும் தூரம் ஒரு மீட்டருக்கும் குறைவாக உள்ளது; மரத்தின் வோ்கள் வெட்டப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளன; இந்த நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுகள் வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளன. எதிா்மனுதாரா்களால் நீதிமன்றம் அவமதிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு முகாந்திரம் உள்ளது’ என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த வழக்கில் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்ஆதித்யா என். பிரசாத் வாதிடுகையில், ‘சம்பந்தப்பட்ட அந்த இடத்தில் எந்த நிறுவனத்தாலும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மரங்கள் கைவிடப்பட்டதும், சேதப்படுத்தப்பட்டதும் புகைப்படங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது’ என்று கூறினாா்.

பிபின் சந்திர பால் மாா்க் மற்றும் சித்தரஞ்சன் பூங்காவின் அருகிலுள்ள பகுதிகளில் நிலத்தடி குழாய், கேபிள் பதிக்கும் பணி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை ஆழமாகவும் அகலமாகவும் பள்ளங்கள் போடப்பட்டு, குறிப்பாக ஒரு மீட்டா் சுற்றளவில் நிற்கும் மரங்களின் தண்டுகளின் வோ்களை சேதப்படுத்தியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT