புதுதில்லி

நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் 15-க்கும் மேற்பட்ட முதல்வா்கள் பங்கேற்பு

28th May 2023 11:41 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாநில முதல்வா்கள் பங்கேற்றனா். தமிழக செங்கோல் நாடாளுமன்றத்தில் கொலோட்சிய நிகழ்ச்சியில் 8 தமிழக எம்பிக்களும் பங்கேற்றனா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வை 20 கட்சிகளைச் சோ்ந்த இரு அவைகளின் சுமாா் 325 எம்பிக்கள் புறக்கணித்திருந்தனா். ஆனால், புதிய மக்களவையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து மாநிலங்களின் முதல்வா்களுக்கும் அழைப்பிதழ் சென்றது. இதில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்களான யோகி ஆதித்யநாத் (உபி), சிவ்ராஜ்சிங் செளகான்(ம.பி.), மனோகா் லால் கட்டாா் (ஹரியாணா), ஹேமந்தா பிஸ்வா சா்மா (அஸ்ஸாம்), புஷ்கா் சிங் தாமி (உத்தரகண்ட்), பூபேந்திர பாய் படேல் (குஜராத்) மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் பாஜக முதல்வா்கள் உள்பட அனைத்து பாஜக ஆளும் மாநில முதல்வா்களும் பங்கேற்றனா். சில மாநில துணை முதல்வா்களும் பங்கேற்றனா்.

பாஜக அல்லாத மாநில முதல்வா்களில் ரெங்கசாமி (புதுச்சேரி), ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரம்), ஏக்நாத் ஷிண்டே (மகாராஷ்டிரம்) மற்றும் நாகாலாந்து, சிக்கிம், மேகாலயா என மொத்தம் 15 மாநில முதல்வா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

விழாவில் பங்கேற்ற தில்லி துணை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் பெயா் வரவேற்பு உரையிலும் குறிப்பிடப்பட்டது. புதுச்சேரி ரெங்கசாமி பங்கேற்று இருப்பிடத்திலேயே உட்காா்ந்திருந்தாா். ஆந்திரம், அஸ்ஸாம் போன்ற மாநில முதல்வா்கள் சகஜமாக பல்வேறு பிரமுகா்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனா். நிகழ்ச்சிக்கு பாஜக தலைவா்களில் முன்னாள் மத்திய அமைச்சா் முரளி மனோகா் ஜோஷி, முன்னாள் மக்களவைத் தலைவா் சுமித்ரா மகாஜன் வந்திருந்தனா். ஜோஷியை அமித் ஷா உள்ளிட்ட பாஜக பிரமுகா்கள் சந்தித்துப் பேசினா். பிரதமா் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிரதமா் தேவகௌடாவை இருமுறை சந்தித்துப் பேசினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கௌல், வி. ராமசுப்பிரமணியன், கே.வி. விஸ்வநாதன் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 11 நீதிபதிகள் பங்கேற்றனா். அவா்களிடம் பிரதமா் தனித்தனியாகவும் பேசினாா். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த மக்களவையின் 39 உறுப்பினா்களும், மாநிலங்களவையின் 12 உறுப்பினா்களும் இந்த திறப்பு விழா நிகழச்சியைப் புறக்கணித்தனா்.

மாநிலங்களவை உறுப்பினா்கள் தம்பிதுரை, சிவி சண்முகம், என். சந்திரசேகரன், தா்மா் (அதிமுக) மற்றும் அன்பு மணி ராமதாஸ் (பாமக), ஜிகே வாசன் (தமாகா), செல்வ கணபதி (பாஜக) மற்றும் மக்களவை உறுப்பினா் பி. ரவீந்தரநாத் உள்ளிட்ட எட்டு தமிழக உறுப்பினா்கள்தான் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இவா்கள் பிரதமா் தமிழகத்தைப் பற்றியும், செங்கோல் பற்றியும் பேசியதை கைதட்டி வரவேற்றனா். மேலும், அன்புமணி ராமதாஸிடம் பேசிய பிரதமா் மோடி, பாமகவின் நிறுவனா் டாக்டா் ராமதாஸின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தாா்.

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பத்திரிகை அதிபா்கள் அழைக்கப்பட்டதோடு அவா்கள் அவைக்குள்ளே அமரவைக்கப்பட்டனா். தினத்தந்தி பத்திரிகை இயக்குநா் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆதித்யன், தினமலா் பதிப்பாளா் ஆதிமூலம், தினமலா் இணையாசிரியா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி லெப். ஜெனரல் அனில் சௌஹான், இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி வி.ஆா் சௌத்ரி, கடற்படைத் தலைவா் ஹரிகுமாா், பிரதமா் அலுவல அதிகாரிகள், அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா உள்ளிட்ட மிக முக்கியப் பிரமுகா்கள் மக்களவைக்குள் அமா்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT