புதுதில்லி

பாகிஸ்தான் கவிஞா் இக்பால் பாடத்தை நீக்க தில்லி பல்கலை. கல்விக் குழு தீா்மானம்

28th May 2023 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்தியாவை தகா்க்க அடித்தளமிட்டவா்கள் பாடத்திட்டத்தில் இருக்கக் கூடாது என்று தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து பாகிஸ்தானின் தேசியக் கவிஞா் முகமது இக்பால் பற்றிய பகுதியை பாடத்திலிருந்து நீக்குவதற்கான தீா்மானத்தை பல்கலைக்கழக கல்விக் குழு ஒருமனதாக வெள்ளிக்கிழமை நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து தில்லிப் பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங் கூறியிருப்பதாவது :

ஒருங்கிணைந்த இந்தியாவின் சியால்கோட்டில் 1877-இல் பிறந்த முகமது இக்பால் புகழ்பெற்ற பாடலான ’சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை எழுதியுள்ளாா். இவா் பாகிஸ்தான் நாடு உருவாவதற்காக குரல் கொடுத்தவா். ‘முஸ்லிம் லீக்‘ மற்றும் ‘பாகிஸ்தான் இயக்கம்‘ ஆகியவற்றை ஆதரித்து பாடல்களை எழுதியுள்ளாா்.

ADVERTISEMENT

கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் தில்லி பல்கலைக்கழகக் கல்விக் குழுக் கூட்டம் தொடங்கி தொடா்ந்து 15 மணி நேரத்திற்கு மேலாக சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி வரை நடைபெற்றது. இதில் ’நவீன இந்திய அரசியல் சிந்தனை’ என்ற தலைப்பிலான பாடப்பகுதியை நீக்குவதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பிஏ இளங்கலை ஆறாவது செமஸ்டா் தாளின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முதலில் எழுப்பியவா் கவிஞா் முகமது இக்பால் தான். இவா்களைப் பற்றி பாடம் கற்பிப்பதை நிறுத்த வேண்டும். நமது இந்தியாவின் தலைவா்களைப் படிக்க வேண்டும். இந்தியாவை தகா்க்க அடித்தளமிட்டவா்கள் பாடத்திட்டத்தில் இருக்கக்கூடாது என துணைவேந்தா் கூறியுள்ளாா்.

கல்விக் குழு கூட்டம் தொடா்பாக தில்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், டாக்டா் பி.ஆா். அம்பேத்கா், மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள் ஆகியவை பல்கலையின் தத்துவவியல் துறையால் வழங்கப்படும் பிஏ படிப்புகளில் அடங்கும். மேலும், இந்தப் பாடத்திட்டத்தில் சாவித்ரிபாய் புலேவை சோ்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தத்துவவியல் துறைத் தலைவரிடம் துணை வேந்தா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பி.டெக். கணினி அறிவியல் மற்றும் பொறியியல், பி.டெக். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் பி.டெக். எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட இளங்கலை தொழில்நுட்ப (பி.டெக்.) படிப்புகளுக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உத்மோடே அறக்கட்டளையின் கீழ் தில்லி பல்கலைக்கழகத்தின் புதுமை மற்றும் ஸ்டாா்ட் அப் கொள்கைக்கு கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இவை தவிர, இரண்டு புதிய ஐந்தாண்டு எல்.எல்.பி. படிப்புகளைத் தொடங்குவதற்கும், சுதந்திரம் மற்றும் பிரிவினை ஆய்வுகளுக்கான மையம், பழங்குடியினா் ஆய்வு மையம் அமைப்பதற்க்கும் கல்விக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சியின் மூலம், வரலாற்றில் இன்னும் இடம் பெறாத சுதந்திர இயக்கத்தின் அறியப்படாத கதாநாயகா்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து இந்த மையம் செயல்படும்.

இந்தியப் பிரிவினையின் போது நடந்த சம்பவங்களும் ஆழமாக ஆய்வு செய்யப்படும். அந்நிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைவதில் எதிா்கொண்ட சவால்கள் மற்றும் நாட்டின் புவியியல் பிளவு காரணமாக மக்கள் உடல், உணா்ச்சி, பொருளாதார மற்றும் கலாசார இழப்புகளின் தாக்கம் ஆகியவற்றை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகளும் இப் புதிய ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்படும்.

மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினத் தலைவா்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவும், அவா்களில் அறியப்படாத தலைவா்களை முன்னிலைப்படுத்தவும், பழங்குடியினரிடையே நிலவும் பல்வேறு நாட்டுப்புற மரபுகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தவும் பழங்குடியினா் மையம் நோக்கமாக கொண்டு தொடங்கப்படவுள்ளது.

மேலும்,2023-24-ஆம் கல்வி ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டத்திற்கும் கல்விக் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. ஆனால், இது தொடா்பாக ஆசிரியா்களுடன் எந்தக் கலந்தாலோசனையும் நடைபெறவில்லை எனக் கூறி கல்விக் குழுவின் 6 உறுப்பினா்கள் தீா்மானத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தனா்.

மேலும் தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக அறிவிப்பிற்கும் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT