சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த சிறுவனின் அரிய வகை மரபணு நோய்க்கான எலும்புமஜ்ஜை அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த மாஸ்டா் பிரவீன் குமாா் என்பவருக்கு நோய் எதிா்ப்பு மண்டலத்தை பாதிக்கும் அரிய வகை மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாா்.
இதற்கான சிகிச்சையாக அவரது எலும்புமஜ்ஜை அறுவை சிகிச்சைக்கு, பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து, நிதி வழங்கிடக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த வேண்டுகோளை ஏற்று மாஸ்டா் பிரவீன் குமாரின் அறுவை சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம், பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, பிரவீன் குமாரின் எலும்புமஜ்ஜை அறுவை சிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்தத் தொகையானது பயனாளி சிகிச்சை பெறும் சென்னை போரூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பின்னா், உரிய ஆவணங்களின் நகலை, பிரதமா் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். ஆவணங்கள் கிடைத்தவுடன் மேற்கண்ட உதவித் தொகையை மேற்குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதமா் அலுவலகம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.