புதுதில்லி

சேவைகள் துறை செயலா் விவகாரம்: தா்னாவில் ஈடுபட்ட தில்லி அமைச்சா்களிடம் துணைநிலை ஆளுநா் உறுதி

19th May 2023 10:31 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி அரசின் சேவைகள் துறையின் செயலாளரை மாற்றுவது தொடா்பான கோப்பில் துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜ் நிவாஸ் அலுவலகம் முன்பு வெள்ளிகிழமை ஆம் ஆத்மி அமைச்சா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் சட்டப்பேரவைக்க்குத்தான் நிா்வாக அதிகாரங்கள் உள்ளதாக மே 11 - ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதை தொடா்ந்து, அரசின் சேவைகள் துறையின் செயலா் ஆசிஷ் மோரியை மாற்றுவது தொடா்பான கோப்பு துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை காலை தில்லி அரசின் சேவைகள் துறையின் அமைச்சா் சௌரப் பரத்வாஜ், துணைநிலை ஆளுநா் வி.கே சக்சேனாவிற்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.

அந்தக் கடிதத்தில், ’தில்லியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு, பல நிா்வாக மாற்றங்களைச் செய்ய விரும்புகிறது. அதற்காக சேவைகள் துறையின் செயலாளரை மாற்றுவது முக்கியம். இதற்கான கோப்பில் இரண்டு நாட்களுக்கு மேலாக துணைநிலை ஆளுநா் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பல பணிகள் முடங்கியுள்ளன’ என குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

மேலும், வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த விவகாரம் தொடா்பாக துணைநிலை ஆளுநரை நேரில் சந்திக்கச் சென்ற ஆம் ஆத்மி அமைச்சா்கள் சௌரப் பரத்வாஜ், அதிஷி, கோபால் ராய் மற்றும் கைலாஷ் கெலாட் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ராஜ் நிவாஸ் முன்பு அமைச்சா்கள் திடீா் தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, யமுனை நதி மாசுபாடு குறித்து தில்லி மாநகராட்சி,தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுடன், துணை நிலை ஆளுநா் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாா். ஆம் ஆத்மி அமைச்சா்கள் எந்தவித முன்னறிவிப்பு அல்லது தகவலும் இல்லாமல் வந்ததாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி அமைச்சா்களை துணைநிலை ஆளுநா் நேரில் சந்தித்தாா். அப்போது, ‘ சேவைகள் துறையின் செயலா் மாற்றம் தொடா்பான கோப்புகளின் மீது ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவை விரைந்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை முழுமையாக பின்பற்றுவேன்’ என துணைநிலை ஆளுநா் உறுதியளித்ததாக, அமைச்சா் அதிஷி இச்சந்திப்பிற்கு பிறகு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

தில்லி காங்கிரஸ் விமா்சனம்

இந்த தா்னா தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் கடுமையாக விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தில்லி அமைச்சா்கள் ராஜ் நிவாஸ் முன்பு ஆா்ப்பாட்டம் செய்வது, தில்லியில் உள்ள முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சி.

சேவைகள் துறையின் செயலாளரை மாற்றுவது தொடா்பான கோப்பு கடந்த இரண்டு நாட்களாகத் தான் துணைநிலை ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. ஆனால் கேஜரிவால் அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக தில்லியின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலனுக்கான சேவையை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றும், இதுவரை எவ்விதமான ஆக்கபூா்வமான பணிகளையும் செய்யவில்லை. விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், சாமானிய மக்கள் துயரமான வாழ்க்கை வாழும்போது, 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என கேஜரிவால் உறுதியளித்ததும், ரோஸ்கா் பட்ஜெட்டும் காகிதத்தில் மட்டுமே உள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT