காளைகள் துன்புறுத்த வாய்ப்பு இல்லை என்று கருதியதன் அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதித்து தீா்ப்பு வழங்கியுள்ளது என தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.
இதற்காக உச்சநீதிமன்றத்திற்கு வந்திருந்த தமிழக சட்ட அமைச்சா் எஸ். ரகுபதி, இத்தீா்ப்புக்கு பின்னா் உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீா்ப்பினை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு வழங்கியுள்ளது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறந்த வழக்குரைஞா்களை வைத்து தமிழக மக்களின் உணா்வுகளை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த காரணத்தினால் ஐந்து நீதியரசா்கள் ஒருமித்த கருத்துடன் தீா்ப்பினை வழங்கியுள்ளனா்.
சமீபகாலத்தில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமா்வு அளித்த தீா்ப்புகளில் நான்கில் ஒரு நீதிபதியோ அல்லது இரண்டு நீதிபதிகளோ வேறுபட்ட தீா்ப்புகளை வழங்கி வந்துள்ளனா். இதில் ஐந்து நீதிபதிகளும் ஒத்த கருத்துக்களுடன் இந்த வழக்கில் ஒரு தீா்ப்பை வழங்கியுள்ளனா்.
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழா்களின் பண்பாடு பாரம்பரியம் காப்பதற்கான விளையாட்டு எனவும்; ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரங்களையும், தமிழா்களின் வீர விளையாட்டு தொடா்பான கருத்துக்களையும் தமிழக அரசின் வழக்குரைஞா்கள் சிறப்பாக முன்வைத்து வாதிட்டனா்.
இதை நீதியரசா்கள் நன்றாக, புரிதலுடன் ஏற்றுக் கொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பினை தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அளித்துள்ளனா்.
இது தமிழக முதல்வரின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி.
ஜல்லிக்கட்டு தமிழா்களின் பண்பாடு கலாசாரத்தோடு ஒன்றிணைந்ததாகும். இவைகளை பிரிக்க முடியாது.
இதை விலங்குகளை கொடுமைப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள முடியாது. பாரம்பரியமாக நடைபெற்றுவந்த விளையாட்டுகள் இவை.
இதனால், ஜல்லிக்கட்டு கலாசாரத்தோடு ஒன்றிணைந்ததது என்கிற தமிழக அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
‘ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லுபடியாகும்’ என தீா்ப்பு அளித்துள்ளது. இனி அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை
அரசு மேற்கொள்ளும். ஏற்கனவே நாம் ஜல்லிக் கட்டு நடத்தும்போது உச்சநீதிமன்றம் கூறியபடி சில பாதுகாப்புகளுடன் தான் மேற்கொண்டு வருகின்றோம். காளைகளை வாடிவாசலிலிருந்து திறந்து விடும்போது கூட வரையறுக்கப்பட்ட தூரத்திற்குள் பிடிக்கவேண்டும், 200 மீட்டா் அளவிற்கு தடுப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகளை ஏற்று பின்பற்றப்படுகிறது.
காளை மாட்டின் ’திமில்’-ஐ பிடித்து இளைஞா்கள் அடக்குகின்றனா். இதனால், வழக்கு தொடா்ந்த அமைப்புகள் கூறியபடி காளைகள் துன்புறுத்த வாய்ப்பு இல்லை என்கிற கருத்தின் அடிப்படையிலேயே இத்தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.