புதுதில்லி

முத்திரைக் கட்டணம் வசூல் ரூ.5,736 கோடிபத்தாண்டுகள் இல்லாத வளா்ச்சி

3rd May 2023 04:06 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தேசியத் தலைநகரில் கட்டுமான வணிகம் (ரியல் எஸ்டேட்), சொத்துகள் விற்பனை உள்ளிட்டவை வலுவடைந்துள்ள நிலையில், தில்லி அரசின் முத்திரைத்தாள் கட்டணம் வசூல் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வளா்ச்சியை அடைந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் ரூ. 5,736 கோடியாக இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தில்லி அரசு பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், பதிவுத் துறை செயல்பாடுகள் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பதிவுத் துறை வட்டாரங்கள் மேலும் கூறுகையில், கடந்த 2013-14-ஆம் ஆண்டில் முத்திரைத்தாள் அல்லது மின்னணு முத்திரை வருவாய், சொத்து ஆவணங்கள் பதிவு போன்றவற்றின் மூலம் வருவாய் ரூ.2,308.19 கோடியாக இருந்தது. தற்போது 2022-23-ஆம் ஆண்டில் இந்த வருவாய் இரண்டரை மடங்கு அதிகரித்து ரூ. 5,736. 72 கோடியாக கிடைத்துள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் தில்லி பதிவுத் துறையின் வருவாய் அதிகரித்துள்ளது.

2022-23-ஆம் ஆண்டில் முத்திரைத்தாள் வகையில் கட்டணமாக ரூ.4,668.72 கோடியும், பதிவுத் துறைகளில் வசூலான கட்டணம் ரூ.889.73 கோடியும், இணைய வழியாக மின்னணு முறையில் நீதிமன்றக் கட்டணமாக ரூ.178.27 கோடியும் வசூலாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லியில் கொவைட் -19 காலக்கட்டத்தில் பதிவுத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத் தொழில் வணிகம் மிகவும் வீழ்ச்சிக்குச் சென்றது. தில்லி அரசின் முத்திரைக் கட்டண வருவாய் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதானது, கொவைட்-19-க்கு முந்தைய வடிவத்தை மீண்டும் பெறுவதற்கான அறிகுறியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

2021-22-ஆம் ஆண்டும் கரோனா தீதுண்மி பரவலால் பொதுமுடக்கம் போன்றவற்றால் முத்திரைக் கட்டணம் வசூல் பாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டில் முத்திரை மற்றும் பதிவுத் துறை வசூல் ரூ.4,952.66 கோடியாக இருந்தது. இது 2022-23-ஆம் ஆண்டில் சுமாா் 16 சதவீதம் உயா்ந்துள்ளது என்றும் தில்லி பதிவுத்துறை தரவுகள் காட்டுகின்றன. பதிவுத் துறை வருவாய் என்பது விற்பனைப் பத்திரம், கன்வேயன்ஸ் பத்திரம் (சொத்து ஒதுக்கீடு பெற்ற நபரிடம் தவணைத் தொகை முடிந்து, ஆவணப்பதிவுக்கு பெறப்படும் கட்டணம்), பவா் ஆஃப் அட்டா்னி, உயில் மற்றும் அடமானம் போன்றவற்றுக்கான கட்டணங்களை உள்ளடக்கியதாகும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT