புதுதில்லி

தில்லியில் இன்ஃப்ளுயென்ஸா பாதிப்பு அதிகம் இல்லை: அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் தகவல்

DIN

தில்லியில் இன்ஃப்ளுயென்ஸா பாதிப்பை கண்டறிய முன்கூட்டியே பரிசோதனைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், தில்லியில் இதன் பாதிப்பு அதிகமாக இல்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாா்ச் மாதத்தின் போது வழக்கமாக பருவகால இன்ஃப்ளுயென்ஸா பாதிப்பு உச்சநிலையில் இருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முறை அதிக எண்ணிக்கையில் இந்தக் காய்ச்சல் பாதிப்பு பதிவாகி வருகிறது. முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் திட்டம் ஏதும் தில்லி அரசிடம் இல்லை. பொது இடங்களில் கூடுவதைத் தவிா்ப்பது, கைகளை சுத்தம் செய்து கொள்வது போன்ற முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

கடுமையான ஆஸ்துமா பாதிப்பு அல்லது கரோனா பாதிக்கப்பட்டவா்கள்தான் இந்நோயால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். 65 வயதுக்கு மேற்பட்டவா்கள்,நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆகியோருக்கு கூடுதல் முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது.

மத்திய அரசு இன்ஃப்ளுயென்ஸா தொடா்பாக 6 மாநிலங்களுக்கு கொவைட் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தப் பட்டியலில் தலைநகா் தில்லி இல்லை. எனினும், இன்ஃப்ளுயென்ஸா பரவாமல் தடுக்க நாங்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறோம். இன்ஃப்ளூயென்ஸா மற்றும் கரோனா ஆகியவை விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரேமாதிரியாகவே பின்பற்றப்படும். தினசரி அடிப்படையில் நிலைமையைக் கண்காணிக்கும் வகையில், மருத்துவமனை அதிகாரிகள், சுகாதார வசதிகள், மாவட்ட கண்காணிப்பு பிரிவுகள் ஆகியவற்றுக்கு அரசு மூலம் அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நோய் பாதிப்புகளைக் கண்டறியும் வகையில், முன்கூட்டியே பரிசோதனை நடத்துவதை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தில்லி மருத்துவமனைகளில் இன்ஃப்ளுயென்ஸா பாதித்தோா் எண்ணிக்கை அதிகளவில் இல்லை. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், எஃப்எம் ரேடியோ சேனல்கள், செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மூலம் தில்லி அரசு விழிப்புணா்வு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அமைச்சா் பரத்வாஜ்.

இது தொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம் ஆா்) அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதில், இன்ஃப்ளுயென்ஸாவின் ‘ஏ’ பிரிவான ‘எச்3என்2 வைரஸ்’ காரணமாக இன்ஃப்ளுயென்ஸா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதர துணை பிரிவுகளைவிட ‘எச்3என் 2 வைரஸ்’ பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நோயின் அறிகுறியாக மூக்கில் நீா் வடிதல், தொடா்ந்து இருமல் மற்றும் காய்ச்சல் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT