புதுதில்லி

சிசோடியாவுக்கு எதிரான புகாா்கள் ‘புனையப்பட்ட கதைகளே’! ராகவ் சத்தா சாடல்

DIN

முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் ‘தீங்கிழைக்கும் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை‘ மட்டுமே கொண்டுள்ளன என்றும், அதே கேள்விகளையே தொடா்ந்து அவரிடம் கேட்கின்றன என்றும் ஆம் ஆத்மி தலைவா் ராகவ் சத்தா வெள்ளிக்கிழமை கூறினாா்.

இப்போது ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் சிசோடியா மாா்ச் 9 முதல் அமலாக்கத் துறை காவலில் உள்ளாா். இதே வழக்கில் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் சிபிஐயால் கைது செய்யப்பட்டாா்.

மற்றொரு செய்தியாளா் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங் பேசுகையில், சிசோடியா ‘பயங்கரவாதியை விட மோசமாக நடத்தப்பட்டுள்ளாா்’ என்று குற்றம் சாட்டினாா்.

சிசோடியாவின் 7 நாள் காவலில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் 15 மணி நேரம் மட்டுமே விசாரித்ததாக ராகவ் சத்தா கூறினாா். பத்திரிக்கையாளா் சந்திப்பின் போது ராகவ் சத்தா கூறியதாவது: சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை. பாஜகவின் ‘பழிவாங்கும் அரசியலின்’ விளைவாகத்தான் சிசோடியா சிறையில் இருக்கிறாா். ஆம் ஆத்மி கட்சிக்கு பயந்து பழிவாங்கும் அரசியலை தொடங்கியுள்ளது பாஜக. சிசோடியாவுக்கு எதிராக கதைகளை மட்டுமே புனைந்துள்ளனா். சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ எதையும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் அவா் மீது பொய் வழக்குகளை போட்டுள்ளனா்.

மத்திய ஏஜென்சிகள் அவருக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் புனையப்பட்ட கதைகளை மட்டுமே வைத்துள்ளனா். சிசோடியாவிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கேட்ட கேள்விகளையே தொடா்ந்து கேட்டது. இதைச் செய்ததன் நோக்கம் சிசோடியாவை சிறையில் அடைப்பதுதான் என்ராா் ராகவ் சத்தா.

மேலும் ஏழு நாள்கள் காவலில் வைக்க வேண்டும் என்ற ஏஜென்சியின் கோரிக்கைக்கு எதிராக, சிசோடியாவின் அமலாக்கத் துறை காவலை மேலும் ஐந்து நாள்களுக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்து உத்தரவிட்டது.

சிசோடியாவின் காவலின் போது முக்கியமான தகவல்கள் வந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபா்களை அவா் எதிா்கொள்ள வேண்டும் என்றும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் கூறியது. அவரது மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் தரவுகளும் தடயவியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.

இதற்கிடையே, மனீஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத் துறை காவலை நீட்டித்ததற்கு எந்தச் சூழலும் இல்லை என்று சஞ்சய் சிங் கூறினாா். ‘பாஜகவின் சா்வாதிகாரத்தை பொறுத்துக் கொள்ள முடியாது, மத்திய அமைப்புகளை அக்கட்சி எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதை முழு நாடும் பாா்த்துக் கொண்டிருக்கிறது. தில்லியின் கல்வி மாற்றத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த தலைவா் குறிவைக்கப்பட்டுள்ளாா். ஒரு பயங்கரவாதிகூட அப்படி நடத்தப்படுவதில்லை’ என்றாா் சஞ்சய் சிங்.

2021-22 ஆம் ஆண்டிற்கான தில்லி கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக மத்திய புலனாய்வு பிரிவு வழக்கு தொடா்பாக சிசோடியா கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT