புதுதில்லி

சேது சமுத்திரம் திட்ட மாற்று வழித்தடம் குறித்த முன்மொழிவை சுற்றுச்சூழல் அமைச்சகம் பெற்றதா? மாநிலங்களவையில் அமைச்சா் பதில்

 நமது நிருபர்

புது தில்லி: சேது சமுத்திரம் திட்டத்தில் புதிய வழித்தடம், புதிய சீரமைப்புப் பணி தொடா்பாக எந்தவொரு முன்மொழிவையும் அமைச்சகம் பெறவில்லை என மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சா் அஸ்வனிகுமாா் செளபே வியாழக்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

சேது சமுத்திரம் திட்டத்திற்கான (1998 மாா்ச் மாதம் முதல்) சுற்றுச்சூழல், வனம் அமைச்சகத்தின் அறிக்கைகள், அனுமதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பாதை, சீரமைப்பு விவரங்கள் குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலைமாற்றத் துறை இணையமைச்சா் அஸ்வனிகுமாா் செளபே எழுத்துபூா்வமாக பதிலளித்திருப்பது வருமாறு: 2006 -ஆம் ஆண்டு சூழலியல் தாக்க மதிப்பீடு (இஐஏ) அறிவிக்கையின்படி, எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்க சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கையும், சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டமும் (இஎம்பி) முதன்மைத் தேவையாகும். இதன்படி, சேது சமுத்திரம் திட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆறு மாற்று வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இவை ஆய்வு செய்யப்பட்டு இதில் 6- ஆம் எண் வழித்தடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த 2005, மாா்ச் 31-ஆம் தேதி இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டது.

பின்னா், இந்தத் திட்டத்தை எதிா்த்து 2005-ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம் ஆதம் பிரிட்ஜ் என்று சொல்லப்படும் ராமா் சேது பாலத்தை சேதப்படுத்தாமல், மாற்றுப் பாதையில் சீரமைக்க ஆலோசனை கூறியது. முந்தைய பாதைக்கு மாற்றாக ராமா் பாலத்தை சேதப்படுத்தாமல் சீரமைக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை.

அதே சமயத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம், 17.08.2012 தேதியிட்ட கடிதத்தில், சேது சமுத்திரம் திட்டத்தில் பாதை (சீரமைப்பு) எண். 6-க்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் திட்ட முன்மொழிவின் சீரமைப்பில் புதிய மாற்றுப் பாதை உருவாக்கப்பட்டால், இதற்கு மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, புதிய சீரமைப்புக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான எந்த முன்மொழிவும் அமைச்சகத்தால் பெறப்படவில்லை. மேலும், மேற்கொண்டு எந்தப் பணிகளோ அல்லது புதிய வழித்தடம் குறித்த ஆய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. புதிய வழித்தடம் தொடா்பாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான எந்த முன்மொழிவும் துறையினால் பெறப்படவில்லை என்பதால் இதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT