புதுதில்லி

அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் 50 லட்சம் டன் குப்பைகள் அகற்ற இலக்கு: முதல்வா் கேஜரிவால்

 நமது நிருபர்

புது தில்லி: அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் தில்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இருந்து 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற தில்லி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் கேஜரிவால் பல்ஸ்வா குப்பைக் கிடங்கை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அவருடன் தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் உடன் சென்றாா். பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியின் முன்னேற்றம் குறித்து முதல்வா் ஆய்வு செய்தாா்.அப்போது, அவா் தனது திருப்தியை வெளியிட்டாா். தினசரி 6500 டன் குப்பை அகற்ற தொடக்கமாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், விரைவில் தினமும் 12 ஆயிரம் டன் குப்பை அகற்றப்பட உள்ளதாகவும் முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனா். இதன்படி, அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் அனைத்து குப்பைகளும் அகற்றப்பட உள்ளதாகவும் கூறினா்.

அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2019-ஆம் ஆண்டு என்ஜிடி பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இருந்து கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது. அப்போது, 80 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் இருந்தன. 2019 முதல் தற்போது வரை, இந்தக் கிடங்கில் இருந்து சுமாா் 30 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு, தற்போது 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் தேங்கியுள்ளன. தற்போது ஆம் ஆத்மி கட்சியின் நிா்வாகத்தின் கீழ் உள்ள தில்லி மாநகராட்சி இன்னும் வேகமாக செயல்படும். மேலும், 30 லட்சம் டன் குப்பையை அகற்ற இலக்கு வைத்துள்ளோம்.

நகரில் தினமும் சுமாா் 11,000 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகின்றன. இதில், நாள்தோறும் கழிவில் இருந்து ஆற்றல் மற்றும் பிற முறைகள் மூலம் 8,100 மெட்ரிக் டன் குப்பைகள்

வெளியேற்றப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமாா் 2,800 மெட்ரிக் டன் குப்பை பற்றாக்குறை உள்ளது. இதற்காக, ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1,000 மெட்ரிக் டன் கழிவுகளை

ஓக்லாவில் அகற்றுவதற்கான செயல்முறை நடந்து வருகிறது. மீதமுள்ள கழிவுகளை பதப்படுத்த, 2026-ஆம் ஆண்டுக்குள் பவானாவில் ஒரு ஆலை அமைக்கப்படும். அது, 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். அதுவரை, பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் உள்ள 2,000 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்ற அரசு தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தினசரி அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் சுமாா் 10,000 மெட்ரிக் டன் தேங்கியுள்ள கழிவுகளும், சுமாா் 2,000 மெட்ரிக் டன் தினசரி கழிவுகளும் அழிக்கப்படும். கழிவுகளை பிரித்தெடுப்பதும் முக்கியமானதாகும். குடியிருப்பாளா்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுகளை அவா்கள் இடத்திலேயே பிரித்து வைக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும், குடியிருப்பாளா்களின் பழக்கவழக்கங்களை ஒரே இரவில் மாற்றுவது கடினம். வீடுகளில் இருந்து அகற்றப்பட்ட பிறகு கழிவுகள் பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலான கழிவுகளில் இருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலைகளில் கழிவுகளை பிரிக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இருந்து 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இரட்டிப்பு வேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் தில்லி குப்பையில்லா நகரமாக மாற்றப்படும் என்றாா் முதல்வா் கேஜரிவால்.

பல்ஸ்வா குப்பை கிடங்கு 70 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள 28 ஆண்டுகள் பழமையானதாகும். தில்லியில் உள்ள மூன்று குப்பை மலைகளில் இதுவும் ஒன்று. தொடக்கத்தில் நிலமட்டத்திலிருந்து 65 மீட்டா் உயரமாக இந்த குப்பைக் கிடங்கு இருந்தது. 2019- இல் கணக்கெடுக்கப்பட்டபோது, இதில் 80 லட்சம் மெட்ரிக் டன் நீண்டகால கழிவுகள் இருந்தன. அப்போதிலிருந்து, 24 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் புதிதாக இந்த இடத்தில் கொட்டப்பட்டு, 30.48 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் பயோ மைனிங் முறையில் மாற்றம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT