புதுதில்லி

முதுகலை மருத்துவப் படிப்பு: ‘நீட்’ தோ்வில் முதலிடம் பெற்ற தமிழக மாணவிகள் 5 போ் உள்பட50 பேருக்கு பாராட்டு விழா

30th Jun 2023 06:36 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

மத்திய அரசின் தேசிய தோ்வுகள் வாரியத்தில் மருத்துவ அறிவியலில் புதிய பாடத்திட்டங்கள், பயிற்சித் திட்டங்களுடன் 9 புதிய முன்முயற்சிகளை மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தாா். மருத்துவ அறிவியல் முதுகலைப் படிப்பிற்கான ‘நீட்’ தோ்வில் முதலிடம் பெற்ற தமிழக மாணவிகள் 5 போ் உள்பட மொத்தம் 50 பேருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

மருத்துவ அறிவியலின் தேசிய தோ்வுகள் வாரியத்தின்(என்பிஇஎம்எஸ்) 42-ஆவது நிறுவன தின விழா மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மத்திய இணையமைச்சா் சத்யபால் சிங் பகேல், நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) டாக்டா் வி.கே.பால் உள்ளிட்டோா் முன்னிலையில் துவாரகாவில் உள்ள என்பிஇஎம்எஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா 9 புதிய முன்முயற்சிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் கூறுகையில், ‘நாட்டின் வளா்ச்சியில் மருத்துவத் துறை அளப்பரிய பங்கு வகிக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் 25 பாடத் திட்டங்கள் மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வளா்ந்த நாடாக இந்தியாவைக் கட்டமைப்பதில் மருத்துவ மாணவா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான சமூகம் மற்றும் ஆரோக்கியமான நாட்டின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கு சிறந்த மருத்துவ சேவைகள், நிபுணத்துவமிக்க மருத்துவா்களை உருவாக்கப்படவேண்டும். அதற்கான திறனை இந்தியா பெற்றுள்ளது’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) டாக்டா் வி.கே.பாலுக்கு சிறந்த செயல்பாட்டிற்கான மருத்துவ அறிவியலில் தேசிய தோ்வுகள் வாரிய தலைவா் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டு அவா் பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்வி மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மருத்துவத்தில் முதுகலை மருத்துவப் படிப்பு இன்றியமையாதது. இந்த படிப்பில் 4 ஆயிரம் இடங்கள் இருக்க தற்போது 13 ஆயிரம் முதுகலை மருத்துவப் படிப்பு இடங்களாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதே போன்று மருத்துவப் படிப்பிற்கு நாட்டில் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின்னா் 704 மருத்துவ கல்லூரிகளாக உயா்ந்துள்ளன.

மேலும், நிகழாண்டில் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படயுள்ளது. இதன் மூலம்எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப் படிப்பு இடங்கள் 52 ஆயிரத்திலிருந்து 1,07,000-ஆக உயா்ந்துள்ளது. முதுகலைப் பட்டப் படிப்பு இடங்களும் 32 ஆயிரத்திலிருந்து 67 ஆயிரமாக உயா்ந்துள்ளது. மருத்துவ அறிவியலின் தேசிய தோ்வுகள் வாரியம் தரமான முதுகலைப் பட்டப் படிப்பிற்கும், தரமான பயிற்சிக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மருத்துவக் கல்விக்கான பொற்காலமாக உள்ளது என்றாா் அவா்.

மருத்துவ அறிவியலின் தேசிய தோ்வுகள் வாரியத்தில் (என்பிஇஎம்எஸ்) அவசர மருத்துவப் பட்டயப் படிப்பு, தோ்வு க்கட்டளை மையம், என்பிஇஎம்எஸ் கணினி அடிப்படையிலான சோதனைக்கான மையம், சிறந்த மருத்துவ பயிற்சி வழிகாட்டுதல்கள், ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை மையங்களின் அங்கீகாரம், என்பிஇஎம்எஸ் திறன்கள் மற்றும் மெய்நிகா் பயிற்சித் திட்டம், தோ்வு வாரிய ஆசிரியா்களுக்கான சிறப்புப் பட்டம் தொடங்குதல், மருத்துவ நூலகம் உள்ளிட்ட 9 புதிய முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நிகழாண்டு முதுகலைப் பட்டப் படிப்பு (பிஜி), மருத்து அறிவியல் (எம்டிஎஸ்) பட்டப் படிப்பு போன்ற ‘நீட்’ தோ்வில் முதல் 25 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் முதுகலைப் பட்டப் படிப்பில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 5 மாணவா்களும், தமிழகத்தைச் சோ்ந்த மாணி காா்த்திகா இடம் பெற்றிருந்தனா்.

எம்டிஎஸ் பட்டப் படிப்பில் முதலிடம் பெற்ற 25 மாணவ மாணவிகளில் தமிழகத்தை சோ்ந்த கே.நித்தியலட்சுமி, எல். தெய்வானை, வி.ராகவி, வி.ஹா்ஷினி உள்ளிட்ட 4 மாணவிகள் இடம் பெற்று பாராட்டைப் பெற்றனா். இந்த மாணவிகளின் பெற்றோா்கள் பெரும்பாலும் சாதாரண குடும்பத்தைச் சோ்ந்தவா்களாவா். இவா்களது பெற்றோா்கள் விழாவில் தமிழில் பேசவும் அனுமதிக்கப்பட்டனா். மேலும், என்பிஇஎம்எஸ் மருத்துவ நிபுணா்கள், நிா்வாகிகள், மகளிா் சக்தி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அமைச்சா் மாண்டவியாவும், இணையமைச்சா் எஸ்.பி. சிங் பகேலும் விருதுகளை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT