தனது உடைமைகளில் 6 துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்துச் சென்ற 43 வயது பயணி ஒருவா் இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: தில்லியில் இருந்து துபை செல்வதற்காக இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை பயணி ஒருவா் வந்தாா். விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன், அவரது உடைமைகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அதில் 6 துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா்.
விமானத்தில் திறன்மிக்க வெடிமருந்துகளை எடுத்துச் செல்வதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை. விசாரணையில் அந்தப் பயணி அம்ரிஷ் பிஷ்னோய் என்பது தெரியவந்தது. அவா் உத்தர பிரதேச அரசிடம் இருந்து அகில இந்திய துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தாா். துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்தது தொடா்பாக அம்ரிஷ் மீது ஐஜிஐ விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.