மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதி தொழிற்சாலையின் இரண்டாவது மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 55 வயது ஊழியா் உயிரிழந்தாா். மேலும், அவரது சக ஊழியா் காயமடைந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ஆனந்த் பா்பத் பகுதி தொழிற்சாலையில் புதன்கிழமை தொழிலாளா்கள் வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது, ஆலையின் இரண்டாவது மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 2 போ் காயமடைந்தனா். மற்றவா்கள் காயம் ஏதுமின்றி உயிா் தப்பினா்.
காயமடைந்த இருவரும் அருகில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். அவா்களை மருத்துவா்கள் பரிசோதித்தனா். அவா்களில் உத்தம் நகரில் வசிக்கும் சத்ருகன் சந்த் என்பவா் சிகிச்சைக்கு வரும் வழியில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருடன் பணிபுரிந்த சேஷ் நாராயண் திவாரி (30) தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்தச் சம்பவம் குறித்து புதன்கிழமை இரவு 7 மணியளவில் இஎஸ்ஐசி மருத்துவமனை தெரிவித்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 304 ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆலை இயங்கி வந்த கட்டடத்தின் உரிமையாளா் சரப்ஜீத் சிங் இச்சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.