மத்திய அரசின் அவசரச் சட்டத்தின் நகல் வருகின்ற ஜூலை 3-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஏரிக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி ரௌஸ் அவென்யூ பகுதியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளரும், அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது: தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்திற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டமாக, வரும் ஜூலை 3- ஆம் தேதி முதல் ‘கருப்புச் சட்டம்’ நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும். அன்று ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அவசரச் சட்ட நகலை எரிப்பாா். அந்த நிகழ்வில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்பாா்கள்.
அதைத் தொடா்ந்து, ஜூலை 5- ஆம் தேதி, தேசியத் தலைநகரின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். ஜூலை 6-ஆம் தேதி முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை, தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் தீ வைத்து எரிக்கப்படும். ஆம் ஆத்மியின் ஏழு துணைத் தலைவா்களும் தில்லியின் ஒவ்வொரு பகுதியிலும் ‘கருப்புச் சட்டம்’ நகல் எரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவசரச் சட்டத்தின் மூலம் தில்லியை சட்டவிரோத கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா் செளரவ் பரத்வாஜ்.
இந்தச் செய்தியாளா் சந்திப்பில் கட்சியின் ஏழு துணைத் தலைவா்களான திலீப் பாண்டே, ஜா்னைல் சிங், குலாப் சிங், ஜிதேந்தா் தோமா், ரிதுராஜ் ஜா, ராஜேஷ் குப்தா மற்றும் குல்தீப் குமாா் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே நிா்வாக அதிகாரங்கள் உள்ளது என்று கடந்த மே 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தும், அரசின் சேவைகள் விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், மே 19-ஆம் தேதி மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசரச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற விடாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சந்தித்து ஆதரவு கோரியிருந்தாா். அதே வேளையில், கடந்த ஜூன் 11- ஆம் தேதி அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினா் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற ஒரு மகா பேரணியை நடத்தியிருந்தது. இவற்றைத் தொடா்ந்து, தற்போது ஆம் ஆத்மி அவசரச் சட்டத்தின் நகல் எரிப்பு போராட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.