ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜிந்தா் நகா் எம்எல்ஏவுமான துா்கேஷ் பதக் தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) ஆம் ஆத்மி பொறுப்பாளராக வியாழக்கிழமை அக்கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் (அமைப்பு) சந்தீப் பதக் பிறப்பித்துள்ளாா்.
இந்த நியமனம் தொடா்பான பதக் பிறப்பித்த உத்தரவு நகல் அவரது ட்விட்டா் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘தில்லி மாநிலத்திற்கான எம்சிடி ’பிரபாரி’ஆக துா்கேஷ் பதக் நியமனத்தை இதன் மூலம் கட்சி அறிவிக்கிறது. அவருடைய புதிய பொறுப்புக்காக அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு எம்சிடி தோ்தல் மற்றும் ராஜிந்தா் நகா் சட்டப் பேரவை இடைத் தோ்தலுக்கு துா்கேஷ் பதக் தோ்தல் பொறுப்பாளராக இருந்தாா். 2015 தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின் போது, ஆம் ஆத்மி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், 2017-இல் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலின் கட்சியின் இணை பொறுப்பாளராகவும் துா்கேஷ் பதக் இருந்தாா்.