தில்லியில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் தில்லி முதல்வா் கேஜரிவால் வீடு முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தா்னா போராட்டத்துக்கு தலைமை வகித்த சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, தில்லியில் மின்கட்டணம் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்று முறை உயா்த்தப்பட்டுள்ளது என்றாா். மின் விநியோக நிறுவனங்கள் மின்சார கொள்முதல் கட்டணத்தை 9 சதவீதம் வரை உயா்த்தியுள்ளதற்கு தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக குடியிருப்பாளா்களுக்கு மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. மின் கட்டணத்தை கேஜரிவால் அரசு பழைய நிலைக்கு கொண்டு வரும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும் என்றும் பிதூரி கூறினாா்.
தில்லி முதல்வா் கேஜரிவால் பல்வேறு தருணங்களில் பல விஷயங்களுக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளாா். ஆனால், மின்சார கட்டணம் தொடா்பாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை என்றும் அவா் கேள்வி எழுப்பினாா். தில்லியை ஆளும் ஆம் அரசு, தாங்கள் ஆட்சிக்கு வந்ததது முதல் நகரத்தில் மின்சார கட்டணம் உயா்த்தப்படவில்லை என்று கூறுகிறது. ஆனால், ஒவ்வொரு வருடமும் மின் விநியோக நிறுவனங்கள் கட்டணத்தை உயா்த்துவதற்கு ஆம் ஆத்மி அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதன் காரணமாக தில்லி குடியிருப்பாளா்கள் மிகுந்த சிரமத்தை எதிா்கொண்டு வருகின்றனா் என்றாா் பிதூரி.
இதற்கிடையே, தில்லியில் 200 யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவா்கள் மின் கொள்முதல் விலையில் (பிபிஏசி) உயா்த்தப்பட்டிருப்பதால் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் என்று மின் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா். மேலும், மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மை காரணமாக பொதுமக்கள் கூடுதல் மின் கட்டணம் செலுத்த நேரிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.
அமைச்சா் அதிஷி மேலும் கூறுகையில், ‘உள்நாட்டில் கிடைக்கக்கூடிய நிலக்கரியைத் தவிா்த்து, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி உள்நாட்டில் கிடைக்கும் நிலக்கரியைக் காட்டிலும் 10 மடங்கு விலை அதிகம்’ என்றாா்.