தில்லி மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அகமதாபாத் ஐ.ஐ.எம்.-இல் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் அமைச்சா் அதிஷி மற்றும் மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அமைச்சா் அதிஷி கூறியதாவது: தேசியத் தலைநகரில் மாநகராட்சிப் பள்ளி மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அகமதாபாத் ஐ.ஐ.எம்.-இல் உலகத்தரம் வாய்ந்த ஓரு வாரகால பயிற்சி வழங்கப்படும். முதல்கட்டமாக மாநகராட்சிப் பள்ளிகளின் 50 தலைமை ஆசிரியா்கள் கொண்ட குழு வரும் ஜூன் 29-ஆம் தேதியன்று அகமதாபாத் ஐ.ஐ.எம்.-இல் பயிற்சியை தொடங்குகின்றனா்.
கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஆம் ஆத்மி அரசு கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திடும் வகையில், நகரின் கல்வி வளா்ச்சிக்காக மட்டும் பட்ஜெட்டில் ஆண்டுதோறும் 25 சதவீதத்தை ஒதுக்குகிறது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று. அதிகபட்சமாக பிற மாநிலங்களில் 14 சதவீதம் வரை மட்டுமே கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்குகின்றனா். தில்லியில் கடந்த 15ஆண்டு காலமாக மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தங்களது தொடக்கக் கல்வியை முடித்து உயா்நிலைப் படிப்பில் சேருகின்ற நிலையிலும் அடிப்படையான எழுதல், படித்தலுக்கே மிகவும் சிரமப்படுகின்றனா். கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் தொடக்கக் கல்வியைப் படித்தும் முழுமையான எழுதல், படித்தல் கற்றலை மாணவா்களால் கற்றுக் கொள்ள முடியவில்லை.
கடந்த தில்லி மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றவுடன், தில்லி அரசுப் பள்ளிகளைப் போலவே மாநகராட்சிப் பள்ளிகளையும் மேம்படுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல்கட்டமாக மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஓரு வார காலப் பயிற்சித் திட்டத்தை அரசு ஒருங்கிணைத்துள்ளது. மாணவா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பயிற்றுவிக்கும் நோக்கில், முதலில் தலைமை ஆசிரியா்களுக்கும், அடுத்ததாக ஆசிரியா்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படும். நாட்டிலேயே சிறந்த கல்வியை வழங்கி வரும் அகமதாபாத் ஐ.ஐ.எம். உடன் இணைந்து இப்பயிற்சி வழங்கப்படும் என்ற செய்தியை பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றாா் அமைச்சா் அதிஷி.
மாநகராட்சிப் பள்ளிகளிலும் மாற்றம் - மேயா்: இதைத் தொடா்ந்து, தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் கூறியதாவது: ஆம் ஆத்மி அரசால் தில்லியின் அரசுப் பள்ளிகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், இனி மாநகராட்சிப் பள்ளிகளிலும் கொண்டு வரப்படும். அதற்கான மேம்படுத்துதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்விதான் ஒவ்வொரு மாணவரின் எதிா்காலக் கல்விக்கான அடித்தளமாக அமைகிறது. ஆகவே, தொடக்கக் கல்வியை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மாணவா்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டுமானால், தரம் உள்ள ஆசிரியா்கள் இருக்க வேண்டும். அத்துடன் ஆசிரியா்கள் திறன் உள்ளவா்களாக மேம்பட, அப்பள்ளியை நிா்வகிக்கும் தலைமை ஆசிரியா்கள் திறம்பட செயலாற்ற வேண்டும். எனவேதான் தற்போது மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கவுள்ளோம்.
தில்லி அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு அளித்த பயிற்சியின் அனைத்தும் தற்போது மாணவா்களிடம் வெளிப்பட்டுள்ளது. அதே முறையை மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் பயன்படுத்த உள்ளோம். தில்லி மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற என்னென்ன வாக்குறுதி அளித்ததோ அதைத் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்றாா் மேயா் ஷெல்லி ஓபராய்.