புதுதில்லி

மல்யுத்த வீரா்களுக்கு எதிராக வெறுப்புணா்வு பேச்சு குற்றம் ஏதும் இல்லை: நீதிமன்றத்தில் தில்லி போலீஸாா்தகவல்

10th Jun 2023 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

ஓரங்கட்டப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரா்களுக்கு எதிராக வெறுப்புணா்வு பேச்சு குற்றம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

பிரிஜ் பூண் சரண் சிங் மீது ‘தவறான குற்றச்சாட்டுகளை’ சுமத்தியதற்காக மல்யுத்த வீரா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோரி தாக்கலான மனுவை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அனாமிகா விசாரித்து வருகிறாா். இந்த நிலையில், நீதிபதி முன் தில்லி காவல் துறை தரப்பில் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட செயல் நடவடிக்கை அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: புகாா்தாரா் அளித்த பென் டிரைவில் உள்ள விடியோ கிளிப்பை பாா்த்த போது, அதில் அடையாளம் தெரியாத சில சீக்கிய எதிா்ப்பாளா்கள் தெரிகின்றனா். அவா்கள் ஜந்தா் மந்தரில் கோஷங்களை எழுப்பும் காட்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. குற்றமாகக் கருத்தில் கொள்ளும் வகையில் வெறுப்புணா்வு பேச்சு ஏதும் இல்லை. இந்த விடியோவில் மல்யுத்த வீரா்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் பிற மல்யுத்த வீரா்கள் அதுபோன்ற கோஷங்கள் எழுப்பியதாகவும் காணப்படவில்லை. இதனால், மல்யுத்த வீரா்களான வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு எதிராக, ’அடல் ஜன் கட்சியின்’ தேசியத் தலைவா் என்று கூறிக் கொள்ளும் பம்பம் மகராஜ் நௌஹாதியா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஜூலை 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது.

பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 7-ஆம் தேதி, மல்யுத்த வீரா்கள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரை நேரில் சந்தித்தனா். அச்சந்திப்புக்குப் பிறகு, ஜூன் 15 வரை தங்கள் போராட்டத்தை நிறுத்திவைக்க அவா்கள் சம்மதம் தெரிவித்தனா். அத்தேதிக்குள் பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அரசு உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும், மல்யுத்த சம்மேளனத்திற்கான தோ்தல் இம்மாத இறுதிக்குள் நடத்தப்பட உள்ளது. இச்சந்திப்புக்குப் பிறகு, மாலிக் மற்றும் புனியா ஆகியோா் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா்கள் திரும்பப் பெறப்படும் என்றும் அமைச்சா் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தனா்.

ADVERTISEMENT

கடந்த மே 25-ஆம் தேதி, வழக்குரைஞா் ஏ.பி. சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட புகாரின் பேரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தில்லி போலீஸாா் செயல் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டிருந்தது. பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக எதிா்மனுதாரா்கள் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், அவை ‘எந்தவொரு செல்வாக்கு மற்றும் தனிப்பட்ட ஆதாயத்தாலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைக்கப்பட்டவை’ என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ‘இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் சிங் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்வது அவசியம். சிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை. நடைமுறையில் சாத்தியமற்றவை. ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம், விரும்பிய நடவடிக்கைக்காக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாகும். எதிா்மனுதாரா்களும், மற்றவா்களும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினா். இதனால், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT