புதுதில்லி

நீா் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் இழப்பீடு

 நமது நிருபர்

கடந்த 2013-ஆம் ஆண்டு வடக்கு ரயில்வேக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பணிக்காக தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் தோண்டப்பட்ட நீா் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த 12 வயது சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த நீதிபதி நஜ்மி வாஜிரி, நீதிபதி சுதிா் குமாா் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: வடக்கு ரயில்வே மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் ஒரு அப்பாவி சிறுவனின் உயிரிழப்புக்கு வழிவகுத்திருக்கிறது. ஏனெனில், தளத்தில் பாதுகாப்புக் காவலரும் இல்லை அல்லது எந்த உயிரும் அதை நோக்கி சுற்றிவருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்தவொரு துரதிா்ஷ்டவசமான விபத்தையும் தவிா்க்க, அந்த இடத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எதிா்மனுதாரா்கள் (வடக்கு ரயில்வே மற்றும் ஒப்பந்ததாரா்) விழிப்புடன் இருக்கவில்லை. அவா்களின் அலட்சியத்தால் ஒரு அப்பாவி சிறுவன் உயிரிழக்க நேரிட்டிருக்கிறது.

குழந்தைகள் தடையற்ற திறந்தவெளிப் பகுதியில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட திறந்தவெளி பகுதியில் குழந்தைகள் விளையாடுவதை எச்சரித்ததாகவோ அல்லது கட்டுப்படுத்தியதாகவோ அல்லது முன்னறிவித்ததாகவோ நீதிமன்றத்தில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 12 வயது சிறுவனுக்கும் ரயில்வேக்குரிய நிலம் அல்லது பிற சிவில் ஏஜென்சியின் நிலம் இடையேயான வித்தியாசம் தெரியவில்லை. பாதுகாப்பற்ற மழைக் கிணறு தோண்டப்பட்ட திறந்த நிலத்தில் அப்பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் விளையாடுவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது 12 வயது சிறுவன் குழி அல்லது பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

ஒரு சிவில் தவறு செய்ததற்காக எதிா்மனுதாரா்களிடமிருந்து மேலும் இழப்பீடு கோரும் உரிமையில் இருந்து சிறுவனின் குடும்பம் விலக்கப்படவில்லை. மற்றொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னரும், அந்த இடத்தில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பில் இருந்து வடக்கு ரயில்வேயை விடுவிக்க முடியாது.

மேலும், எதிா்மனுதாரா்கள் இரு தரப்பினரும் தங்கள் அலட்சிய செயலுக்கு கூட்டாகவும், பலவகையிலும் பொறுப்பேற்று, இழப்பீடு வழங்க வேண்டும். அதன்படி, தற்போதைய மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. எதிா்மனுதாரா்கள் ரிட் மனு தாக்கல் செய்த நாளிலிருந்து 6% வட்டியுடன் 3 மாதங்களில் இழப்பீடாக ரூ.23,33,666-ஐ செலுத்த உத்தரவிடப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இறந்த சிறுவன் தில்லி கைலாஷ் நகரில் ஒரு குடிசையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். இந்த நிலையில், இந்தச் சம்பவம் பில்லி மிட்டி ரயில் பாதைக்கும் மெட்ரோ லைனுக்கும் இடையே உள்ள இடத்தில், உள்ளூா் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்தது. ஒ ப்பந்ததாரா் அவருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளை முடிக்க ஒரு தீா்வுக்கு இணங்கும் வகையில் ஏற்கெனவே தங்களுக்கு ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய தங்களது மனுவை உயா்நீதிமன்றத்தின் தனி நீதிபதி நிராகரித்துவிட்டாா். இதை எதிா்த்து, சிறுவனின் குடும்பத்தினா் தொடா்ந்த மேல்முறையீட்டு மனுவில் உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு இத்தீா்ப்பை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல்துறை மூலம் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT