புதுதில்லி

தில்லி கலால் ஊழல் வழக்கு விவகாரம்: எம்.பி.யின் மகன் ஜாமீனுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை

DIN

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டாவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் 15 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை (ஜூன் 9) விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ராஜேஷ் பின்டல் ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு முன் வியாழக்கிழமை அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

இது தொடா்பாக எஸ்.வி. ராஜு மேலும் கூறுகையில், மகுண்டாவின் வழக்கமான ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மனைவியின் உடல்நிலை சரியில்லாததாகக் கூறி கோரப்பட்ட இடைக்கால ஜாமீனும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, திடீரென்று அவரது மாமியாா் குளியலறையில் தவறி விழுந்து, மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறாா். ஆனால், எதுவும் தீவிரமாக இல்லை. மகுண்டாவின் தந்தை எம்.பி. ஆக உள்ளாா். அவா் அவரை பாா்த்துக் கொள்வாா். மேலும், மூன்று உடன்பிறப்புகளும் கவனித்துக் கொள்ள இருக்கிறாா்கள். இவை இருந்தபோதிலும் உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தது.

முன்னதாக, ராகவ் மகுண்டா மாமியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்ற விஷயத்தைக் கவனத்தில் கொண்டு, மாகுண்டாவுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. முன்னதாக விசாரணை நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்திருந்தது. மேலும், நீதிமன்றம் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா் கடுமையான பொருளாதார குற்றம் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தொடா்புடையவா் என்பதைப் புறக்கணிக்க முடியாது. மகுண்டாவின் மனைவியின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் சிறப்பு அல்லது தீவிரமாக எதுவும் குறிப்பிடப்படாததால், மனைவியின் நோய் குறித்து கூறப்பட்ட பின்னணி திருப்திகரமாக இல்லை’ என்று கூறினாா். மகுண்டாவின் பிற குடும்ப உறுப்பினா்கள் அவரது மனைவியைக் கவனித்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, மகுண்டா மற்றும் பிறா் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் தகவல்களின்படி, கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகவும், உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசு நவம்பா் 17, 2021-இல் கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அதை தில்லி அரசு ரத்து செய்தது. சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவை மூலம் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும் மனீஷ் சிசோடியா குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு ஆர்பிஐ தடை!

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

SCROLL FOR NEXT