புதுதில்லி

இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள அமைச்சா் அதிஷிக்கு அனுமதி: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

8th Jun 2023 01:33 AM

ADVERTISEMENT

அடுத்த வாரம் அலுவல்பூா்வமாக இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள தில்லி கல்வித் துறை அமைச்சா் அதிஷிக்கு அனுமதி அளித்துள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலதிக ஒப்புதல்களுக்காக பொருளாதார விவகாரங்கள் துறைக்கு இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதுவும் செயலாக்கப்படவும், தேவையான நுழைவு இசைவு அனுமதிக்கும் மனுதாரா் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

மேலும், புதன்கிழமை காலைதான் வெளியுறவு அமைச்சகம் இதற்கான அனுமதியை வழங்கியதாக அதிஷியின் வழக்குரைஞா் நீதிபதியிடம் தெரிவித்தாா். அப்போது, செவ்வாய்கிழமையே அந்த அனுமதி அளிக்கப்பட்டதாக மத்திய அரசின் வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமா்வு நீதிபதி சந்திர தாரி சிங் மத்திய அரசின் வழக்குரைஞரிடம் கூறுகையில், ‘நிலுவையில் உள்ள ஒப்புதலை அளிக்க வேண்டும். மேலும், இது வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ‘ஒரு சம்பிரதாயம்’ தான்’ என்று கூறியது.

ADVERTISEMENT

நீதிபதியின் கருத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் வழக்குரைஞா், ‘அரசியல் அனுமதி கிடைத்துவிட்டால் எந்தத் துறையும் இந்த விவகாரத்தில் குறுக்கே வராது’ என்றாா்.

முன்னதாக, விசாரணையின்போது மனுதாரா் அதிஷி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷதன் ஃபராசத் கூறுகையில், ‘ ஜூன் 14 முதல் 20 வரை மனுதாரா் இங்கிலாந்து செல்ல உள்ளாா். இதனால், அனுமதிக்கான நிலுவையில் உள்ள முன்மொழிவை ஒரு நாளுக்குள் செயல்படுத்த நிதி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பவன் நரங், ‘மனுதாரருக்கு சாதாரண முறையில் அனுமதி வழங்கும்போது ‘அரசியல் கருத்துகளை‘ மனுதாரா் வெளியிட வேண்டாம். மேலும், மனு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக அனுமதி வழங்கப்பட்டது என்பதைக் காட்ட துறையின் மீது அவதூறு கருத்துகளைக் கூறவும் வேண்டாம் கேட்டுக் கொண்டாா்.

மேலும் ‘ மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு 10 நாள்கள் அவகாசம் தேவை. அவா்கள் 3 நாள்களுக்குள் வருகிறாா்கள். எந்த முடிவுக்கும் காத்திருக்காமல் நீதிமன்றத்தில் அற்பமான மனுக்களைத் தாக்கல் செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படுகிறீா்கள். சாதாரண முறையில், 10 நாள்களுக்குள் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. அது அவா்களுக்கு சாதகமாக இருக்கும். இதுபோன்று அரசியல் அனுமதி கிடைக்கும்போது இவ்வளவு அவசரம் காட்டுகின்றனா்.

வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின் அடிப்படையில் நுழைவுஇசைவு சம்பிரதாயங்களை மனுதாரா் தொடர வேண்டும். மனுதாரரிடம் சில விளக்கங்கள் மட்டுமே கேட்கப்பட்டது. அந்தத் தகவலை அளித்ததால் நாங்களும் அனுமதித்தோம்’ என்றாா் அவா்.

முன்னதாக, அதிஷி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கலான மனுவில் தெரிவிக்கையில்,‘ ஜூன் 15-ஆம் தேதி நடைபெற உள்ள ‘100 இல் இந்தியா: உலகளாவிய தலைவராக மாறுவதை நோக்கி’ எனும் மாநாட்டில் பேசுவதற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் அதிஷி ஒரு அமைச்சா் என்ற முறையில் அழைக்கப்பட்டுள்ளாா். கல்வி, சுகாதாரம் மற்றும் நகா்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் ‘வேகத்தைக் காட்ட’ நகர அரசை அனுமதிக்கும் என்பதால், முன்மொழியப்பட்ட பயணமானது தில்லியின் ஆளுகைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

தில்லி அரசாங்கம் கடந்த மாதம் பயணத்திற்கான நிா்வாக அனுமதியை வழங்கிய நிலையில், துணைநிலை ஆளுநா் இதற்கான முன்மொழிவை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தாா். இதன் மீது மத்திய அரசு கேள்விகள் மற்றும் விளக்கத்திற்கு மட்டும் மத்திய அரசு பதில் அளித்து வருகிறது. இதனால், நுழைவு இசைவுக்கு விண்ணப்பிப்பது உள்பட முழு செயல்முறையும் தாமதமானது. மேலும், அனுமதி பெறுவதற்கான செயல்முறைக்கு மத்திய அரசு அதிகாரிகளுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது. 10 நாள்களுக்கு மேலாகியும், அமைச்சருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போதைய விவகாரத்தில், 06.06.2023 வரை இந்த விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்காமல் இருப்பதால், மேலும் அனைத்து சம்பிரதாயங்களுக்கும் நுழைவு இசைவு அனுமதிக்கும் 8 நாள்கள் மட்டுமே உள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசிடமிருந்து அரசியல் அனுமதியை முதல்வா் உள்பட மாநில அரசின் அமைச்சா்கள் பெற வேண்டும் என்ற சட்ட ஷரத்தை எதிா்த்து தில்லி நிதி அமைச்சா் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT