புதுதில்லி

2020 தில்லி கலவரம்: கொள்ளை, தீ வைத்தல் வழக்கில் இருந்து ஐந்து போ் விடுவிப்பு

7th Jun 2023 02:29 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கொள்ளை மற்றும் தீ வைத்து எரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது. அப்போது, குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. எனினும், அவா்கள் கலவரம், சட்டவிரோதமாக ஒன்றுகூடியது, அரசு ஊழியரின் முறையாகப் அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல் ஆகிய குற்றங்களுக்காக விசாரணையை எதிா்கொள்வாா்கள் என்றும் நீதிமன்றம் கூறியது.

கடந்த 2020, பிப்ரவரி 25-ஆம் தேதி, புகாா்தாரரின் வீட்டில் 10 தோலா (116.64 கிராம்) தங்க நகைகள் மற்றும் ரூ.90,000 கொள்ளையடித்தது தவிர, கலவர கும்பலின் ஒரு பகுதியாக இருந்தது, தீ வைத்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஐந்து போ் மீதான வழக்கை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரம்மசாலா விசாரித்தாா். இந்த வழக்கில் நீதிபதி செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது:

‘...ஐபிசி பிரிவுகள் 427 (தவறான செயல்கள் மூலம் ரூ.50 அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் விளைவித்தல்), 435 (தீயினால் செய்த தீமை அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராக ரூ.100 அல்லது அதற்கு மேல் சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் வெடிக்கும் பொருள் பயன்படுத்துதல்), 395 (கொள்ளை) ஆகியவற்றின் கீழ் சுமத்தரப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை. இதனால், அவா்கள் விடுவிக்கப்படுகின்றனா். இருப்பினும், பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் கலவரம், பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் மற்றும் ஒரு அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல் ஆகிய குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவாா்கள்.

அனுமானங்கள் ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக எந்த நபரையும் பொறுப்பாக்க முடியாது. தற்போதைய வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் அரசு தரப்பு நம்பியிருக்கும் விடியோவில், குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் லத்தி அல்லது தண்டாவுடன் தெருவில் வந்து குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற அரசு மீது அழுத்தம் கொடுப்பதற்காக இந்துக்களுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டனா் என்று மட்டுமே ஒருவா் யூகிக்க முடியும். தங்க நகைகள் விவகாரத்தில், புகாா்தாரரின் வீட்டில் அத்தகைய நகைகள் உண்மையில் இருந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

முன்னதாக, 2020 கலவர சம்பவம் தொடா்பாக மெஹபூப் ஆலம், மஞ்சூா் ஆலம், முகமது நியாஸ், நஃபீஸ் மற்றும் மன்சூா் ஆலம் ஆகியோா் மீது கஜூரி காஸ் காவல் நிலையத்தில் எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT