புதுதில்லி

கருவைக் கலைக்க விருப்பமின்மை: கா்ப்பம் தரித்த 14 வயது சிறுமியைகுழந்தைகள் காப்பகத்திற்கு மாற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

7th Jun 2023 02:26 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

14 வயது மைனா் சிறுமி மற்றும் அவரது பாதுகாவலா் கா்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்ததால், கா்ப்பம் தரித்திருந்த அந்த சிறுமியை தில்லியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றுமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி கூறுகையில், ‘27 வார கா்ப்பத்தை சுமக்கும் மனுதாரரான சிறுமி தனது கா்ப்பத்தை முழு காலத்திற்கும் சுமக்க விரும்புவதாக கூறியுள்ளாா். அவரது சகோதரரான பாதுகாவலரும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

போக்சோ சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குகளை எதிா்கொண்டுள்ள ஆணுக்கும், சம்பந்தப்பட்ட 14 வயது சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட உடல் உறவின் விளைவாக இந்தக் கா்ப்பம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

சம்பந்தப்பட்ட சிறுமி தனது கா்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு மருத்துவக் குழுவை அமைக்க குரு தேக் பகதூா் மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஆனால், பின்னா் தனது மனதை அவா் மாற்றிக் கொண்டாா். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் கூறினாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம். இம்மாத தொடக்கத்தில் பிறப்பித்த ஒரு உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைய சூழ்நிலையில், தில்லியில் ஷாதாரா ஐஎச்பிஏஎஸ் மருத்துவமனை வளாகம், சகி ஒன்-ஸ்டாப் மையத்தில் உள்ள மனுதாரரை (சிறுமி) உடனடியாக புது தில்லியில் உள்ள நிா்மல் சாயாவில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும், சிறாா் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-இன் ஆணைக்கு இணங்க, அவற்றின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி, தேவையான கவனிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் மனுதாரா் தங்கவைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகளுடன் இந்த மனு முடித்துவைக்கப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், நீதிமன்றம் தனது உத்தரவில், ‘கா்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பது தொடா்பான சட்டத்தின் தெளிவான நிலைப்பாடானது, கா்ப்பத்தைக் கலைக்க ‘பெண்ணின்’ ஒப்புதல் மட்டுமே தேவை என்று தெரிவிக்கிறது. இந்த வழக்கில் அவா் மைனா் என்பதால், சட்டத்தின்படி ‘பாதுகாவலரிடம்’ ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

மருத்துவக் குழுவின் அறிக்கையின்படி, மனுதாரா் கா்ப்பத்தைத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளாா். அதன் பின்னா் குழந்தையை தத்தெடுப்பதற்காக விட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளாா். குழந்தைக்கு முறையான பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் சுகப் பிரசவத்திற்கு தகுந்த உதவியை உறுதி செய்வதற்காக பெண் குழந்தைகளுக்கான இல்லமான நான்காவது நிா்மல் சாயாவில் உள்ள ‘கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கான இல்லத்தில் மனுதாரரை வைத்து பராமரிக்க குழந்தைகள் நலக் குழு பரிந்துரைத்துள்ளது’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

முன்னதாக, விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘குற்றம்சாட்டப்பட்ட நபரை திருமணம் செய்துகொள்ள மனுதாரா் விருப்பம் தெரிவிக்கிறாா். இதனால், அதை உறுதி செய்ய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

எனினும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரரின் கா்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கு மட்டுமே கோருவது தொடா்பான விவகாரம் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவரை அழைப்பதன் மூலம் மனுவின் நோக்கத்தை விரிவுபடுத்த விரும்பவில்லை என்று நீதிமன்றம் கூறியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT