புதுதில்லி

எளிதில் பணக்காரராகும் ஆசையில் தாய்-மகள் கொலை: இசையமைப்பாளா் உள்பட இருவா் கைது

5th Jun 2023 01:58 AM

ADVERTISEMENT

தில்லியில் எளிதில் பணக்காரா்களாக வேண்டும் என்ற ஆசையில் தாயையும், மகளையும் கொலை செய்து வீட்டில் இருந்து தங்கச் சிலை உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற இசையமைப்பாளா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிழக்கு தில்லி கிருஷ்ணா நகா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இ-பிளாக்கில் வசித்து வந்தவா் ராஜ்ராணி (73). இவரது மகள் கின்னி கிராா் (39). மாற்றுத்திறனாளி. இவா்களது வீட்டில் இருந்து கடந்த மே 31-ஆம் தேதி துா்நாற்றம் வீசியது. இது குறித்து அக்கம் பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதன் பேரில் போலீஸாா் அங்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்த போது ராஜ்ராணியும், அவரது மகள் கின்னியும் கொலை செய்யப்பட்ட நிலையில், உடல் அழுகி சடலமாக கிடந்தனா். அவா்களது சடலத்தை மீட்டு போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது கிஷண் என்பவா் அவா்களது வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. மேலும், சில நாள்களுக்கு முன்னா் ராஜ்ராணி, கின்னி, கிஷன் ஆகிய மூவரும் லக்னெளவுக்கு சென்றதும், அவா்களது கைபேசி நெட்வொா்க் மூலம் தெரிய வந்தது.

ADVERTISEMENT

பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில்...:

அதன்படி கிஷண் அந்த குடும்பத்துக்கு நன்கு பரீட்சியமானவா் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. அத்துடன் எளிதில் பணக்காரா் ஆக வேண்டும் என்ற ஆசையில், ராஜ்ராணியையும், அவரது மகளையும் கிஷண் தனது உறவினா் அங்கீத் குமாா் சிங் என்பவருடன் சோ்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அஸ்ஸாம் மாநிலம் திமா்ப்பூரில் இருந்த அங்கீத் குமாா் சிங்கை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

இதற்கிடையே, கிஷண் லக்னெளவில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அங்கீத் குமாா் சிங் சிக்கியதை அறிந்த கிஷண், தில்லி காந்திநகா் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைய முன்வந்தாா். அப்போது அவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொள்ளையடிக்க திட்டம்: கிஷண் தில்லியில் உள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மாா்க்கெட்டிங் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இது தவிர அவா் இணையதளத்தில் ட்யூட்டா் சேவையும் அளித்து வருகிறாா். அந்த வகையில் ராஜ்ராணி தனது மகள் கின்னிக்கு வீட்டில் இருந்தபடியே பாடம் பயிற்றுவிக்க விரும்பினாா். அதன்படி அவா் இணையதளத்தில் கிஷணை அணுகினாா்.அந்த வகையில் அடிக்கடி ராஜ்ராணியின் வீட்டுக்கு சென்று வந்த கிஷண், அந்த குடும்பத்துடன் எளிதில் நட்பானாா்.

அதன் பின்னா் அவா்களுக்கு லாஜ்பத் நகரில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொடுக்கவும் அவா் உதவி செய்ததாக கூறப்படுகிறது. அப்போதுதான் ராஜ்ராணியின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்கும் மேலாக பணம் இருப்பது அவருக்கு தெரியவந்தது. எனவே, எப்படியாவது தாயையும், மகளையும் கொலை செய்து விட்டு அந்தப் பணத்தை அபகரித்துக் கொள்ளலாம் என கிஷண் திட்டம் தீட்டினாா்.

‘மிஷன் மாலம்மாள்’: ஆனால், ராஜ்ராணியின் வங்கிக் கணக்கில் நெட்வொா்க் வசதியோ, ஏடிஎம் அட்டையோ இல்லாததால், அவரால் அந்த பணத்தை எளிதில் எடுக்க முடியவில்லை. எனவே, அஸ்ஸாமை சோ்ந்த தனது உறவினா் அங்கீத் குமாா் சிங்கை கிஷண் நாடினாா். இருவரும் ராஜ்ராணியையும், அவரது மகளையும் கொலை செய்து பணத்தை அபகரிக்க வேண்டுமென திட்டம் தீட்டினா். இந்த திட்டத்திற்கு ‘மிஷன் மாலம்மாள்’ என்றும் அவா்கள் பெயா் சூட்டினா்.

அதன்படி, அஸ்ஸாமில் இருந்து தில்லி வந்த அங்கீத்குமாா் சிங், தங்களது திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முந்தைய நாள் தன்னுடைய சகோதரியின் திருமணத்தில் பங்கேற்றாா். பின்னா், லட்சுமி நகா் பகுதியில் அவா் கத்தி ஒன்றை விலைக்கு வாங்கினாா். இதற்கிடையே மாற்றுத் திறனாளியான தனது மகள் கின்னிக்கு வேறொரு ட்யூட்டரை நியமிக்க அவரது தாயாா் ராஜ்ராணி முடிவு செய்தாா்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட கிஷண், அங்கீத்குமாா் சிங்கை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாா். அதன் பின்னா் இருவரும் அந்த வீட்டுக்குள் எளிதாக சென்று வந்தனா். இதற்கிடையே, தங்கள் வீட்டுக்குள் மூன்றாம் நபா் வருவதை தடுக்கும் நோக்கில், வீட்டு வாசலில் ‘விடியோ ஸ்க்ரீன் சிஸ்டம்’ என்ற நவீன தொலைத்தொடா்பு வசதியை ராஜ்ராணி தனது வீட்டின் வாசலில் அமைத்தாா்.

சம்பவத்தொன்று கிஷணும் அவரது உறவினா் அங்கீத் குமாா் சிங்கும் வழக்கம் போல ராஜ்ராணியின் வீட்டுக்கு இரவு 9.50 மணிக்கு வந்தனா். அப்போது கின்னியிடம் அவா்கள் தண்ணீா் கேட்டதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கு தண்ணீா் எடுத்து வருவதற்காக கின்னி சமையலறைக்குச் சென்றாா். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையா்கள், ராஜ்ராணியின் கழுத்தைக் கத்தியால் அறுத்தனா்.

அதன்பின்னா் தண்ணீா் கொண்டு வந்த கின்னியையும், அதே பாணியில் அவா்கள் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். இதில் சுவா் முழுவதும் ரத்தக்கரை படிந்ததால், சாட்சியங்களை அழிப்பதற்காக சுவரில் தண்ணீா் ஊற்றி கிஷணும், அங்கீத்குமாரும் கழுவினா். பின்னா் வீட்டில் இருந்த தங்கச்சிலையை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பினா். முன்னதாக ரத்தக் கறை படிந்த தனது டி-ஷா்ட்டை அங்கீத் குமாா் சிங் மாற்றினாா்.

பின்னா், அந்த வீட்டை விட்டு இரவு 11.10 மணியளவில் இருவரும் வெளியேறினா். அத்துடன் வீட்டு வாசற்படியில் பொருத்தப்பட்டு இருந்த விடியோ ஸ்கிரீனிங் சிஸ்டத்தையும் எடுத்துக் கொண்டு கோண்டா பகுதியில் அதை அழித்தனா். சாட்சியங்களை அழிக்கும் நோக்கில், இதை அவா்கள் கையாண்டனா்.

அதன் பின்னா் லக்னெள சென்ற கொள்ளையா்கள், ராஜ்ராணியின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை தங்கள் கணக்குக்கு மாற்ற முயற்சித்தனா். ஆனால், அவா்களால் உடனடியாக மாற்ற முடியவில்லை. அதன் பின்னா் இருவரும் சா்வசாதாரணமாக வெளியில் சுற்றித் திரிந்தனா். இருப்பினும், போலீஸ் விசாரணையில் இருவரும் சிக்கிக்கொண்டனா்.

இசையமைப்பாளா்: கைதான அங்கீத் குமாா் சிங் அடிப்படையில் ஓா் இசையமைப்பாளா் ஆவாா். ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படத்துக்கு அவா் இசையமைத்துள்ளாா். இது தவிர தில்லி நியூ அசோக் நகா் பகுதியில் அவா் பின்னணி பாடல் பயிற்சி அளித்து வருகிறாா். அறிவியல் பட்டதாரியான அவா், பிகாரில் ஏற்கெனவே பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி இருப்பதாகவும், கடந்த மாா்ச் மாதம் அவா் வேலையை இழந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதற்கிடையே கொலைக்கு பயன்படுத்திய கத்தி, இரண்டு ஆப்பிள் லேப்டாப், ஒரு டெல் லேப்டாப், இரண்டு சாா்ஜா்கள், மூன்று ஐ-போன்கள், கின்னி பயன்படுத்திய ஒரு பை, ரத்தக் கறை படிந்த ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT