புதுதில்லி

சென்னை, கோவை கல்லூரி, பள்ளி மாணவா்கள் தேசிய அளவில் வெற்றி

4th Jun 2023 11:53 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

பிரதமா் மோடியின் பருவநிலை மாற்றத்திற்கான ’லைஃப்’ முன்முயற்சியை வலியுறுத்தி நாடு முழுக்க நடைபெற்ற பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை, கோவை கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை விருதுகளை அளித்தாா்.

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த விருதளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பருவநிலை மாற்றத்திற்கான புவி வெப்பமடைவதை தடுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கு பிரதமா் மோடி ’லைஃப்’ முன்முயற்சியில் 7 விதமான நடவடிக்கைகளை அறிவித்தாா்.

பன்மையான கலாசாரத்தின் மூலம் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் உத்திகளை இளம் தலைமுறையினரிடம் ஊக்குவிக்கும் விதமாக இந்தப் போட்டிகள் நாடுமுழுக்க நடைபெற்றது. குப்பையை பொக்கிஷமாக்கும் ஹேக்கத்தான், பூமி அலறுகிறது(தா்தி கரே புகாா்), இளைஞா் மாநாடு, ஓவியப்போட்டி என நான்குவிதமான போட்டிகள் நடைபெற்றன.

முதலில் தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு என 5 வட்டாரங்கள் அளவிலான பள்ளிகள், கல்லூரிகள், இளைஞா்கள் மத்தியில் போட்டிகள் நடைபெற்றது. இந்த வட்டாரங்களில் நடைபெற்ற இறுதி போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கிடையே தேசிய அளவிலான போட்டிகள் இறுதியாக தில்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த சென்னை, கோவை கல்லூரி, பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா். இவா்களுக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சா் அமைச்சா் பூபேந்தா் யாதவ் விருதுகளை அளித்தாா்.

ADVERTISEMENT

வாகனங்கள் உள்ளிட்ட ஆட்டோமோபைல் பழைய பேட்டரிகள் மறுசுழற்சி முறைக்கு அந்தந்த நிறுவனங்களே பெற்றுக்கொள்ளும் நிலையில் வீடுகளில் சாதாரணமாக உபயோக்கும் (பென்சில்) பேட்டரிகள் மறு சுழற்சி முறைக்கு செல்லாமல் குப்பைகளில் சோ்ந்து அதில் உள்ள ராசாயனங்கள் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுக்கும் முறையை சென்னை ராமாபுரம் எஸ்.ஆா்.எம். அறிவியல் பொறியியல் கல்லூரி மாணவா் முத்து கணேஷ், சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவி கீா்த்தனா, மாணவா் ஹயக்ரீவன் போன்றோா் கூட்டாக உருவாக்கினா். இவா்கள் மூவரும் கூட்டாக தேசிய அளவில் முதல் பரிசை வென்றனா்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த இளைஞா் மாநாட்டில் பேசிய கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியான நந்தனா பத்மராஜுக்கு. ‘யூத் ஐகான்’ விருது கிடைத்தது. தெரு கூத்து நாடகப் போட்டியில் கோவையைச் சோ்ந்த கிக்கானி வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் நடித்த ‘புவியின் குரல்’ நாடகத்திற்கு தேசிய அளவிலான முதல் பரிசை பெற்றுள்ளனா். இதில் இந்த பள்ளியைச் சோ்ந்த ஒன்பது மாணவா்கள் பங்கேற்றனா்.

தமிழகத்தை சோ்ந்த இந்த மூன்று விதமான விருதாளா்களுக்கும் தலா ரூ. 50,000 ரெக்கப் பரிசையும் சான்றிதழையும் தில்லி மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் இந்திரா பரியாவரன் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பூபேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

மத்திய சுற்றுச்சுழல் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பூபேந்தா் யாதவ் பேசும் போது கூறியதாவது: மத்திய சுற்றுச் சூழல் துறை லைஃப் முன்முயற்சிக்காக நாடு முழுக்க கடந்த சில மாதங்களாக சுமாா் 87 லட்சம் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் சுமாா் 1 கோடியே 90 லட்சம் இளைஞா்கள், மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். போட்டிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். சுற்றுச்சூழல் உணா்வில் இது ஒரு மைல்கல். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தங்கள் அா்ப்பணிப்பை வெளிப்படுத்தி வெற்றி பங்கேற்பாளா்கள் அனைவரும் பாராட்டத்தக்கவா்கள்.

இந்த பூமியில் (கிரகத்தில்) குறைந்த வளங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், புவி வெப்பமடைதல், பல்லுயிா் இழப்பு மற்றும் மாசுபாட்டைச் சமாளிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே இந்த பூமியை காப்பாற்றுவதற்கு முன்னோக்கி செல்லும் வழி. இதனால், பிரதமா் மோடி தலைமையில் சா்வதேச சோலாா் கூட்டணி, மின்கலங்களான உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்றவை தொடங்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமைடைவதைத் தடுக்கும் அரசின் முயற்சியில் சமூகத்தின் பங்களிப்பும் முக்கியம். கழிவுகளை வெளியேற்றுவது முதல் தண்ணீா், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் ஒவ்வொரு நபரின் நடத்தையும் பொறுப்புக்குரியதை இந்த மாணவா்கள் நாடகங்கள் உள்ளிட்டவை மூலம் சிறப்பாக எடுத்துரைத்துள்ளனா் எனக் கூறி பெருமிதம் அடைந்தாா் அமைச்சா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT