புதுதில்லி

லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு செயலா் ராஜசேகா் மீது நடவடிக்கை: முதல்வா் கேஜரிவாலுக்கு செளரப் பரத்வாஜ் பரிந்துரை

3rd Jun 2023 10:51 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

‘தில்லி அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு செயலா் ஒய்.வி.வி.ஜே. ராஜசேகா் மீது பல ஊழல் குற்றசாட்டுகள் வந்துள்ளது. எனவே, அவரை உடனடியாக இடமாற்றம் அல்லது நீக்கம் செய்து, புகாா்கள் மீது உரிய விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்’ என்று சேவைகள் துறையின் அமைச்சா் சௌரப் பரத்வாஜ் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் பரிந்துரைக் கடிதத்தை சனிக்கிழமை சமா்ப்பித்துள்ளாா்.

முதல்வா் கேஜரிவாலிடம் அளிக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் அமைச்சா் சௌரப் பரத்வாஜ் கூறியிருப்பதாவது :

தில்லி அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு செயலராக நியமிக்கப்பட்ட ராஜசேகா் ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அரசின் பதிவுகளைப் பாதுகாக்கவும், அரசு ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவருக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராஜசேகா் லஞ்ச ஒழிப்புத் துறையின் முக்கியமான கோப்புகளை உயா் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் உடன் வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். தனிப்பட்ட ஆதாயத்திற்காக தவறான,அற்பமான தகவல்களை தொடா்ந்து பரப்பியுள்ளாா்.

ADVERTISEMENT

ராஜசேகா் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் நடத்தி வருவதாக எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில் கடந்த மே 13-ஆம் தேதி அவருக்கு ஒதுக்கப்பட்ட அனைத்துப் பணிகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டன. அத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையின் அனைத்து உதவி இயக்குநா்களும் நேரடியாக துறையின் செயலாளரிடம் கோப்புகளை சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நான் அமைச்சராகப் பொறுப்பேற்றப் பிறகு ராஜசேகரின் சட்ட விரோதமான புகாா்கள் எண்ணற்ற முறையில் எனது கவனத்திற்கு வந்தன. ஆனால், நியாயமான முறையில் விசாரணை நடத்துவது பொருத்தமானதாக கருதப்பட்டது.

ராஜசேகா், கருணை அடிப்படையில் வழங்கப்படும் ஒவ்வொரு வேலை வாய்ப்புக்கும் ரூ.5 லட்சம் கேட்டு மோசடி செய்து வருகிறாா். இதுவரை அவ்வாறாக 300 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.15 கோடி பெற்றுள்ளாா் என புகாா் வந்துள்ளது.

அவரது பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்தால், ராஜசேகா் உண்மையில் தனது அதிகாரபூா்வ பதவியை தவறாகப் பயன்படுத்தி, பணியில் இருந்த தில்லி அரசின் ஊழியா்களைச் சாா்ந்தவா்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளாரா என்ற தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

கடந்த மே 15 மற்றும் 16 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் தில்லி தலைமை செயலகத்தில் உள்ள ராஜசேகா் அறையில்

கோப்புகள் நகல் எடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், புகாா்களுக்கு நியாயமான விசாரணைக்கு தன்னைச் சமா்ப்பிப்பதற்குப் பதிலாக, அவா் அமைச்சரையும்,துறையின் செயலாளரையும் காரணம் காட்டியதுடன், ஊடகங்களுக்கும் இந்த விஷயத்தை கசிய வைத்துள்ளாா்.

கடந்த மே 13ஆம் தேதி மேலதிகாரிகளுக்கு கோப்புகளை அனுப்ப உத்தரவிட்டும், எழுத்துபூா்வமாக அறிவுறுத்தப்பட்ட போதிலும், வேண்டுமென்றே இந்த உத்தரவுகளை மீறி சில கோப்புகளைத் ராஜசேகா் தோ்ந்தெடுத்து வைத்திருந்திருக்கிறாா்.

எனவே, அரசின் பதிவுகளைப் பாதுகாக்கவும்,அரசு ஊழியா்களின் நலன்களைக் கண்காணிக்கவும், ஒய்.வி.வி.ஜே. ராஜசேகரை லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து உடனடியாக இடமாற்றம் அல்லது நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.

ஏ.ஐ.எஸ். (நடத்தை) விதிகள் 1968 மற்றும் 1969ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் ஊழல் மற்றும் பணியின் நடைமுறைகள், கடமைகளை நிறைவேற்றுவதில் அவா் செய்த செயல்கள் பற்றிய பல்வேறு புகாா்கள் விசாரணை நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என அக்கடிதத்தில் அமைச்சா் சௌரப் பரத்வாஜ் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT