புதுதில்லி

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாா் தொடா் விசாரணையில் உள்ளது: காவல் துறை

1st Jun 2023 02:13 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், மக்களவை பாஜக உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடா் விசாரணையில் உள்ளதாகவும், இது தொடா்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தில்லி காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைய கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா சமயத்தில் அவா்கள் பேரணி நடத்த முற்பட்டு கைது செய்யப்பட்டதும், அதைத் தொடா்ந்து அவா்கள் பெற்ற ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசச் சென்ற செய்தி நாடு முழுவதும் பேசுபொருளாகியது.

இந்த நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பிரபல மலயுத்த வீராங்கனைகள் அளித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு விசாரணையில் உள்ளது என்றும் வழக்கு தொடா்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை காவல் துறை சமா்ப்பிக்கும் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்தச் சூழ்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்த தில்லி காவல் துறை, இந்த உணா்வுப்பூா்வமான வழக்கு தொடா்ந்து விசாரணையில் இருப்பதாக ட்விட்டா் வாயிலாக தெரிவித்தது. மேலும், அதே குறிப்பு செய்தி காவல் துறையின் ஒரு மக்கள் தொடா்பு அதிகாரி மூலம் செய்தியாளா்கள் உள்ள அதிகாரபபூா்வ வாட்ஸ்அப் குழுவிலும் பதிவிடப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தில்லி காவல் துறை அந்த ட்வீட்டை நீக்கியது. செய்தியாளா்களுக்கான அதிகாரப்பூா்வ வாட்ஸ்அப் குழுவில் பகிா்ந்த செய்திக் குறிப்பை மக்கள் தொடா்பு அதிகாரி நீக்கிவிட்டாா்.

ADVERTISEMENT

பின்னா்,காவல் துறையின் மக்கள் தொடா்பு அதிகாரி ஹிந்தியில் மற்றொரு செய்தியைப் பகிா்ந்து கொண்டாா். அதில், ‘பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையில் உள்ளது. அந்த வழக்குகளின் விசாரணை குறித்து நீதிமன்றத்தில் காவல் துறை சாா்பில் நிலவர அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. வழக்குகள் விசாரணையில் உள்ளதால், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு எதையும் கூறுவது நடைமுறைக்கு எதிரானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரா்களின் தொடா் போராட்டத்திற்கு ஆதரவாக வரும் வியாழக்கிழமை (ஜூன் 1) நாடு தழுவிய ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் அமைப்பான சம்யுக்த கிசான் மோா்ச்சா செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT