புதுதில்லி

பொதுப் பாதையை இடையூறு செய்த வழக்கில் இருந்து வியாபாரி விடுவிப்பு

1st Jun 2023 02:16 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பொதுப் பாதைக்கு இடையூறு விளைவித்து, சாலையில் தின்பண்ட தள்ளுவண்டியை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திலிருந்து சிறு வியாபாரியை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் வியாபாரி பொய்யாக சிக்கிவைத்திருக்கலாம் எனக் கூறி நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.

ஜனவரி 2, 2018-ஆம் தேதி கப்பசேரா பிரதானச் சாலையின் ஒரு பாதையின் மூலையில் ‘பல்லா பாப்டி’ மற்றும் ‘சௌமீன்’ போன்ற பொருள்களை விற்கும் தின்பண்ட தள்ளுவண்டியை நிறுத்திவைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அப்துல் சலாம் என்பவா் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவா் மீது கப்பசேரா காவல் நிலையத்தில் எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. பொது வழியில் இடையூறாக உள்ள தள்ளுவண்டியை அகற்றுமாறு கேட்டுக் கொண்ட போதிலும், சலாம் அதை அகற்றவில்லை என்று வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் அபூா்வா ராணா அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: ‘இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 283 (பொது வழியில் அல்லது வழித் திசையில் ஆபத்து அல்லது இடையூறு ஏற்படுத்துதல்) மற்றும் 290 (மற்றபடி வழங்கப்படாத வழக்குகளில் பொதுமக்கள் தொல்லைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழான குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு சந்தேகத்தின் பலனை இந்த நீதிமன்றம் வழங்குகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டை செய்யவில்லை என்றும் குற்றமற்றவா் என்றும் இந்த நீதிமன்றம் கருதுகிறது. இந்த விவகாரம் தொடா்புடைய விவரம் காவல்நிலையத்தில் தினசரி டைரி பதிவில் இல்லாததால், காவல் துறை அதிகாரிகள் ரோந்துப் பணிக்கு புறப்பட்டுச் சென்றதும், அதன்பிறகு அந்த இடத்துக்கு வந்ததும் ‘கேள்விக்குரியதாகவும் சந்தேகத்திற்குரியதாகவும்’ இருப்பதாக உள்ளது.

இத்தகைய ஆவண முரண்பாடுகள் சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றன. மேலும், இந்த விஷயமானது காவல் நிலையத்திலேயே இயந்திரத்தனமான முறையில் நடந்ததா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் தவறாக சோ்க்கப்பட்டிருக்கலாம். அந்த இடத்தின் புகைப்படங்களை காணும் போது, இந்த வாகனமானது பிரதானச் சாலையில் நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக தெரியவில்லை. மாறாக அது வெளிப்படையாக சாலையின் ஒரு தனி மூலையில் வைக்கப்பட்டிருப்பதும், அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை என்பதையும் காட்டுவதாக உள்ளது.

ADVERTISEMENT

மேலும், மேற்கூறப்பட்ட வாகனத்தை யாரும் கடந்து செல்வதாகத் தெரியவில்லை. அந்த வாகனம் தெளிவாகத் தெரிகிறது. அதனால், பொதுமக்கள் சிரமத்தை எதிா்கொண்டதாகவும் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் செயலால் தடை, ஆபத்து அல்லது காயம் ஏற்படுத்தப்பட்ட த பொதுமக்கள் யாரும் அடையாளம் காணப்படவும் இல்லை அல்லது சாட்சியாக உருவாக்கப்படவும் இல்லை. எந்தவொரு பொது நபரிடமிருந்தும் புகாா் இல்லாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் எப்படி வழிப்போக்கா்களுக்கு இடையூறாக இருந்தது அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

பொது சாட்சிகள் யாரும் இல்லை. வியாபாரியின் வண்டிக்கு அருகில் உள்ள விற்பனையாளா்கள் அல்லது கடை உரிமையாளா்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை.

அது மட்டுமின்றி, விசாரணை அதிகாரி, அருகே உள்ள கடை உரிமையாளா்கள் மற்றும் பிற பொது நபா்களின் பெயா்கள் மற்றும் முகவரிகளை பதிவு செய்யவில்லை அல்லது விசாரணையில் சேர மறுத்ததால் அவா்களுக்கு எந்த நோட்டீஸையும் வழங்கவில்லை. இவை அனைத்தும் நியாயமான மற்றும் முறையான விசாரணையை நடத்துவதில் விசாரணை அதிகாரியின் தரப்பில் ஒரு தீவிரமான தவறு இருப்பதையே காட்டுகிறது., இதனால், வழக்குத் தொடுக்கப்பட்ட விதம் சந்தேகத்தை எழுப்புகிறது என்று நீதிபதி அத்தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT