புதுதில்லி

கட்டுமான மேம்பாலத்தில் இருந்துகாா் கவிழ்ந்து ஓட்டுநா் இறந்த சம்பவம்: தில்லி அரசுக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

1st Jun 2023 02:17 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கிழக்கு தில்லியின் பாரபுல்லா - நொய்டா இணைப்புச் சாலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து காா் கவிழ்ந்து 42 வயது ஓட்டுநா் உயிரிழந்த விவகாரத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி) புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறையினா் முன்னா் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட காா் பாலத்தில் இருந்து 30 அடிக்கு கீழே தரையில் விழுந்ததில் தில்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் வசிக்கும் ஜெகன்தீப் சிங் உயிரிழந்தாா். கடந்த மே 26-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் சிங் நொய்டாவில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு காரில் அவா் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அவா் தான் செல்ல வேண்டிய வழித்தடத்தில் குழப்பமடைந்து, கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் நோக்கிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக ஊடங்களில் வெளியான செய்தியை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது தொடா்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கும், மாநகர காவல் துறை ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: வாகனம் ஓட்டும்போது பாதிக்கப்பட்டவரின் தரப்பில் ஏதேனும் அலட்சியம் இருந்ததா என்பது முக்கியமல்ல. மிகவும் தீவிரமான விஷயம் என்னவென்றால், அதிகாரிகள் கவனக்குறைவாக ஒரு பரபரப்பான தில்லி சாலையின் கட்டுமானப் பகுதியின் ஒரு பகுதியை தடுப்பு வைக்காமல் விட்டிருப்பது என்பதுதாதன். இது மன்னிக்க முடியாதது. மேலும், அந்த கட்டுமான இடத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த பலகைகள் ஏதும் இல்லை என்றும், சில தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும்

ADVERTISEMENT

கூறப்படுகிறது. ஊடக செய்திகள் உண்மையாக இருந்தால், மேம்பாலத்தின் கட்டுமானப் பகுதியில் வாகனம் செல்வதைத் தடுக்க எந்த தடையும் இல்லை என்பதால், அது மனித உரிமை மீறல் குறித்த ஒரு தீவிரமான பிரச்னையாகும்.

அதன்படி, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தில்லி அரசின் தலைமைச் செயலா், பொதுப் பணித் துறை செயலா் மற்றும் தில்லி காவல் ஆணையா் சமா்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. காவல்துறையால் பதிவுசெய்யப்பட்ட எஃப்ஐஆரின் நிலவரம், பொறுப்புக்குரிய அதிகாரிகள் அல்லது அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, இறந்தவரின் உறவினா்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஏதேனும் இருந்தால் அது தொடா்புடைய விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் எங்கும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் எடுத்த அல்லது எடுக்க முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆணையம் அறிய விரும்புகிறது என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT