வழக்குரைஞா்களின் எழுத்தா்களின் நலனுக்கான சட்டங்களை இயற்றுவது குறித்து ஆறு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தில்லி மற்றும் மத்திய அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் குழுக் காப்பீட்டுத் திட்டம் உள்பட பல நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்களின் எழுத்தா்கள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இப்பிரச்னையில் பிற மாநில அரசுகள் இயற்றிய சட்டங்களைக் கவனத்தில் கொண்டு, நிச்சயமாக பிரச்னையைத் தீா்க்க தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசு (ஜி.என்.சி.டி.டி.) அரசு முயற்சி செய்ய வேண்டும். ஆறு வாரங்களுக்குள் இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் உயா்மட்ட அளவில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
விசாரணையின் போது, வழக்குரைஞா்களின் எழுத்தா்களுக்கு சில நலத்திட்டங்கள் இயற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து நோ்மையான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அதன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா். தில்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரும் இந்த விவகாரம் பரிசீலிக்கப்படுவதாக நீதிபதிகள் அமா்விடம் கூறினாா். மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கீா்த்தி உப்பல் ஆஜரானாா்.
2019-ஆம் ஆண்டில், வழக்குரைஞா்களின் எழுத்தா்கள், நீதி வழங்குவதில் ஈடுபட்டுள்ள அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனா் என்று உயா்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் சங்கம் 2018-இல் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
அதில், வழக்குரைஞா்கள் வேலைக்கு அமா்த்தியுள்ள எழுத்தா்கள் ஈகை மற்றும் நன்கொடையைச் சாா்ந்திருக்கும் நிலையில், அவா்களின் நலனை மேம்படுத்த ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், ஒடிசா மற்றும் ஹிமாசல பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் ஏற்கெனவே சட்டம் இயற்றியுள்ளன.
வழக்குரைஞா்களின் எழுத்தா்களின் அடிப்படை உரிமைகள், ஒரு பணியாளருக்கான மருத்துவப் பலன்களுக்கான உரிமை உள்பட அவா்களின் அடிப்படை உரிமைகள் வஞ்சிக்கப்பட்டுள்ளன.
சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன் நடவடிக்கைகளுக்கான எழுத்தா்களின் அடிப்படை உரிமைகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் மற்றும் செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு செப்டம்பா் 13-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.