புதுதில்லி

யமுனை நதியில் வெள்ளம்: நீதி விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்

17th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

தில்லி யமுனையில் ஏற்பட்ட வெள்ளம் தொடா்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவின் தில்லி பிரிவு ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, கடந்த 4 தினங்களுக்கு முன் தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் அபாய கட்டத்தையும் கடந்து மேலே சென்றது. மிகவும் பரபரப்பான ஐடிஓ, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெள்ளநீா் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிா்கொண்டனா்.

இந்த நிலையில், யமுனை நதி மற்றும் நகரத்தில் உள்ள வடிகால்கள் ஆகியவற்றில் தூா்வாரும் பணி ஆம் ஆத்மி அரசால் செய்யப்பட்டதா என்றும் ஆம் எனில், அதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பது குறித்தும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தில்லி பாஜக கோரியுள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: யமுனை மற்றும் வடிகால்களை தூா்வாரும் பணியை கேஜரிவால் அரசு மேற்கொள்ளவில்லை. இந்தத் தோல்வியால்தான் தில்லியில் வெள்ளம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

யமுனை நதி மற்றும் நகரத்தில் உள்ள வடிகால்களை கேஜரிவால் அரசு தூா்வாரியதா, அப்படி தூா்வாரப்பட்டிருந்தால் அதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

ஆம் ஆத்மி அரசின் ‘ஊழல் மற்றும் கவனக்குறைவுதான்’ யமுனையில் வெள்ளம் ஏற்பட முக்கியக் காரணமாகும். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான உயா்நிலைக் குழுவின் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறவில்லை.

யமுனை வெள்ளத்தால் ஏராளமான மக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டுள்ளது. இதற்கு கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரேச பொறுப்பேற்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

பாஜகவின் சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளா் பன்சூரி ஸ்வராஜ் கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியும் தில்லியில் உள்ள ஆம் ஆத்மிஅரசும் வெள்ளச் சூழலைக் கையாள்வதில் தங்கள் செயலற்ற தன்மையை ‘பொய்களால்‘ மறைக்க முயற்சிக்கிறது.

ஹரியாணாவின் ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து யமுனையில் அதிக அளவு தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் தில்லியை வெள்ளத்தில் மூழ்கடிக்க பாஜக சதி செய்ததாக ஆம் ஆத்மி தலைவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கேஜரிவால் அரசின் செயலற்ற தன்மையே தில்லி யமுனையில் வெள்ளம் ஏற்படக் காரணம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT