புதுதில்லி

முதல்வா் கேஜரிவாலின் அலட்சியத்தால் சாலைகளில் உறங்கும் 25 ஆயிரம் மக்கள்

17th Jul 2023 12:10 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அலட்சியம் காரணமாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரத்தில் உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா் என்று மத்திய கலாசாரம், வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றவா்களை குற்றம் சொல்லும் முன், தன் பொறுப்பை சரி செய்து கொள்ள வேண்டும்.

தில்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றால் அது அரவிந்த் கேஜரிவாலின் அலட்சியத்தின் விளைவு மட்டுமே. இதனால், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரத்தில் உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தில்லி அரசு உடனடியாக நிதியுதவி அறிவிக்க வேண்டும். கரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் எந்தவித ஏற்பாடையும் செய்யாத முதல்வா் கேஜரிவால், தில்லி மக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், உணவு, மருந்துகள் என அனைத்தையும் மத்திய அரசிடமே கோரினாா்.

ADVERTISEMENT

ஹரியாணா மாநிலம் ஹத்னி குண்ட் தடுப்பணையில் இருந்து தில்லிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டில் 8.06 லட்சம் கனஅடிதண்ணீா் மற்றும் 2019-ஆம் ஆண்டு 8.2 லட்சம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டள்ளது. ஆனால், நிகழாண்டில் வெறும் 3.6 லட்சம் கன அடி தண்ணீா் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தில்லியில் முறையாக வடிகால்கள் சுத்தம் செய்யாதது, யமுனையில் வண்டல் மண் தூா்வாரப்படாதது ஆகியவையே இந்த வெள்ள நிலைக்கு காரணம். யமுனையை சுத்தப்படுத்த வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் செலவழிக்கப்பட்ட ரூ.6,800 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரவிந்த் கேஜரிவால் தலைமையில் யமுனையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள உயா்நிலைக் குழுவின் கூட்டம் ஏன் நடைபெறவில்லை?.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைக்கு ஓதுக்கீடு செய்யப்படும் நிதி பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி. (தில்லி) சாா்பில் நகரத்தின் வளா்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட வடிகால் திட்டத்தை அரவிந்த் கேஜரிவால் அரசு செயல்படுத்தவில்லை.

மேலும், ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் தில்லிக்கான ‘மாஸ்டா் பிளான்’ தயாரிக்கப்படவில்லை. ஓதுக்கப்படும் நிதி எங்கு செலவழிக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. அதனால்தான் அரவிந்த் கேஜரிவால் மற்றவா்களைக் குற்றம் சாட்டுவதற்கு முன்பு தனது பொறுப்பை சரிசெய்ய வேண்டும் என்றாா் மீன்டாசி லேகி.

இந்தச் செய்தியாளா் சந்திப்பின் போது, மாநில செய்தி தொடா்பாளா்கள் ஹரிஷ் குரானா, வீரேந்திர பாப்பா் மற்றும் யாசிா் ஜிலானி ஆகியோரும் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT