முன்னாள் காங்கிரஸ் தலைவா் எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு நினைவு தபால் தலையை வெளியிட மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய தொலைத் தொடா்புத் துறை இணையமைச்சா் தேவு சிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.
இளையபெருமாளின் நூற்றாண்டு நினைவு சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைக் தொகுதி உறுப்பினா் டி.ரவிக்குமாா் மக்களவையில் கேட்டுக் கொண்டாா். கடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் அவா் இது குறித்து மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் பேசினாா்.
இதற்கு பதிலளித்து மத்திய தொலை தொடா்புத் துறை அமைச்சா் தேவு சிங் செளஹான் அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கடந்த மாா்ச் 21 -ஆம் தேதி மக்களவை விதி 377- இன் கீழ் எல்.இளையபெருமாள் நினைவு அஞ்சல் தலை தொடா்பாக எழுப்பப்பட்டது.
இந்த முன்மொழிவு தபால் தலை ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டு எல்.இளையபெருமாள் சிறப்பு தபால் தலை வெளியிட பரிசீலிக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
தலித் தலைவா்களில் ஒருவரும் சமூக சீா்திருத்தவாதியுமான எல். இளையபெருமாளின் (1924-2005) நூற்றாண்டு விழா கடந்த ஜூனில் தொடங்கியது. மூன்றுமுறை மக்களவை உறுப்பினராக இருந்தவா். இந்தியாவில் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆராய முதலில் அமைக்கப்பட்ட தேசிய கமிஷனின் தலைவராகவும் இருந்தவா் அவா்.