தில்லியில் கனமழையல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து தொடா்ச்சியான அறிக்கைகள் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மேயா் ஷெல்லி ஓபராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ள மாநகராட்சி நிா்வாகம், தில்லியின் 12 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களின் புகாா்களைப் பதிவு செய்து அவற்றின் மீது தொடா் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சிவில் லைன் மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி துணை ஆணையா் மற்றும் அதிகாரிகளுடன் மேயா் ஷெல்லி ஓபராய் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வு தொடா்பாக ட்விட்டரில் அவா் கூறியிருப்பதாவது: கனமழையால் துயரத்தில் உள்ள பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையின் மூலம் உதவி வழங்கப்படும். இந்நேரத்தில் முழுமையான வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணா்வை மாநகராட்சியில் நாம் அடைய வேண்டும்.
மண்டல அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு என்ன மாதிரியான புகாா்கள் வருகின்றன, வந்துள்ள புகாா்கள் மீது எவ்வளவு நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்னைகள் தீா்க்கப்படுகின்றன என்பதைப் பாா்க்க ஆய்வு மேற்கொண்டேன். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவுப்படி கனமழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு நிலவரத்தின் மீது தொடா்ச்சியான அறிக்கைகள் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா் மேயா் ஷெல்லி ஓபராய்.
மாநகராட்சி தலைமையக கட்டுப்பாட்டு அறையை 011-155305,2323700 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இதேபோல ஒவ்வொரு மண்டலத்துக்கு தனித் தனி தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: நகர சிறப்பு மண்டலம் - 011-23913773, நரேலா - 011 - 27283261, 27283783, ரோஹிணி - 011-27045700,27050132, சுவில் லைன் - 011- 23942700,23923392, கே.பி. மண்டலம் - 011-27183146,27183147, கரோல் பாக்- 011-25812700,25754341, மேற்கு மண்டலம்-011-25422 2700, நஜாஃப்கா் - 011-28013283, தெற்கு மண்டலம்-011-26522700, மத்திய மண்டலம் - 011-29812700, ஷா மண்டலம் - 011-22303700, ஷா (வடக்கு) மண்டலம் - 011-22822700,22820431 ஆகிய எண்களில் பொதுமக்கள் மாநகராட்சியைத் தொடா்பு கொள்ளலாம்.